உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தகுதி தேர்வில் விலக்கு கேட்டு மத்திய கல்வி அமைச்சரிடம் மனு

 தகுதி தேர்வில் விலக்கு கேட்டு மத்திய கல்வி அமைச்சரிடம் மனு

திருப்பூர்: தமிழக பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், என மத்திய கல்வி அமைச்சரிடம், தேசிய ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். மதுரைக்கு வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில், மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி மனு அளித்தது குறித்து, கூறியதாவது: தமிழகத்தில் ஆர்.டி.இ. சட்டப்படி, ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். அவ்வகையில், 2012 நவம்பருக்கு முன் பணி நியமனம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 30 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் இது மிகவும் அவசியம் என்று மத்திய கல்வி அமைச்சரிடம் இது குறித்து விளக்கி கோரிக்கை மனு அளித்துள்ளோம். இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர், 'சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, அதனைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள சீராய்வு மற்றும் அப்பீல் வழக்குகள் மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வகையிலும் உரிய வகையில் ஆய்வு செய்து, இவ்விஷயத்தில் உரிய முடிவுகள் மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வை ஆன்லைனில் நடத்துதல், மதிப்பெண் குறைப்பு, உரிய பிரதான பாடங்களில் இருந்து மட்டும் வினாக்களுடன் தேர்வுகளை நடத்துதல் ஆகியன குறித்து மாநில அரசுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. உரிய கால இடைவெளியில் தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும்,' என்றார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை