உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், 'ஏ' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற எட்டாம் வகுப்பு மாணவி பிரதக்ஷனா, மாணவன் ஸ்ரீராம் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரராமேஸ்வரி, பராசக்தி, ஆசிரியர்கள் ஜெயஸ்ரீ, செயந்தி ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். அறிவு பெட்டகம் பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ''தினமலர் 'பட்டம்' இதழ் மாணவர்களுக்கான ஒரு அறிவுப்பெட்டகம். மாணவர்களின் வாசிப்புத்திறனை துாண்டுகிறது. கணிதப்புதிர்கள் சிந்திக்க வைக்கின்றன. அறிவியல் கருத்துகள் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. விளையாட்டு தகவல்கள் உத்வேகத்தை அளிக்கின்றன. மாணவர்களின் பொது அறிவை மேம்படுத்த வினாடி-வினா நடத்துவது 'தினமலர்' நாளிதழின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும்,'' என்றார்.
மாணவர்களுக்கு களஞ்சியம்
மாணவன் ஸ்ரீராம்: 'பட்டம்' இதழை படிப்பதால், உலக நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடிகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி அறிய துணையாக உள்ளது. கணிதம், பண்பாடு புதிர்கள், விளையாட்டு போன்வற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். 'மாற்றி யோசி' பகுதி சிந்தனையை துாண்டுவதாக, உணர்கிறேன். 'பட்டம்' இதழ் மாணவர் சமுதாயத்துக்கு கிடைத்த ஒரு தகவல் களஞ்சியம். மாணவி பிரதக் ஷனா: எனது வாசிப்புத் திறனை மேம்படுத்த 'பட்டம்' இதழ் வாசிக்க ஆரம்பித்தேன். இந்த இதழில் ஒவ்வொரு பக்கமும் மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை கொண்டுள்ளது. பொது அறிவு மட்டுமல்லாமல், தமிழ், அறிவியல், கணிதம், விளையாட்டு, தேதி சொல்லும் சேதி போன்றவை மாணவர்களுக்கு தேவையான தகவல்களை தருவதாக உள்ளது. எதிர்காலத்தில் எழுதப்போகும் போட்டித் தேர்வுகளுக்கு 'பட்டம்' இதழ் உறுதுணையாக இருக்கும்.