உடுமலை;பி.ஏ.பி., பாசன திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாயில், விடுபட்ட பகுதிகளில், புதிய கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. வரும், ஆக., மாதத்திற்குள் பணியை முடித்து, பாசனத்திற்கு நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் சேமிக்கப்படும் நீர், 49.3 கி.மீ., துாரம், முழுவதும் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது.இங்கிருந்து, பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது. திட்டத்திற்கு ஆதாரமாக உள்ள இக்கால்வாய், முழுவதும் வனப்பகுதியிலும், மலையை குடைந்து குகைகள் அமைத்தும், நீர் கொண்டு வரப்படும் நிலையில், நிலச்சரிவு, பாறை, மரம் விழுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், கால்வாய் உடைப்பு, கரை சரிவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது.மேலும், திட்டம் துவங்கி, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், கரைகள், தளம் வலுவிழந்தும், பழுதடைந்தும், திறக்கப்படும் நீரில், 30 சதவீதம் வரை நீர் இழப்பு ஏற்பட்டது.இதனால், பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு முழுமையாக நீர் கிடைக்காத நிலை நீடித்தது. இதனை புதுப்பிக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனையடுத்து, 2014ல், 240 கோடி ரூபாய் செலவில், முழுமையாக கான்கிரீட் கரை, தளம் என புதுப்பிக்கப்பட்டது.இதில், கி.மீ., 30.100 முதல், 49.30 வரை, பல இடங்களில் பணிகள் நிலுவையானது. விடுபட்ட பகுதிகளை புதுப்பிக்க, 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இந்த நிதியின் கீழ், கடந்த இரு ஆண்டுகளாக பணி மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ, 3 கி.மீ., துாரம் விடுபட்ட பகுதிகளில் காண்டூர் கால்வாய் புதுப்பிக்கப்பட்டது.தொடர்ந்து, இரு மண்டல பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு, கடந்த மாதம் நிறைவு செய்யப்பட்டது.இதனையடுத்து, நடப்பாண்டும் காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் திட்டத்தில், விடுபட்ட பகுதிகளில் மூன்றாம் கட்டமாக பணிகள் துவங்கியுள்ளன.காண்டூர் கால்வாயில், 34 வது கி.மீ., முதல், ஒரு கி.மீ., துாரம் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, பழைய கால்வாய் முழுமையாக அகற்றப்பட்டு வருகிறது. பழைய கால்வாய் அகற்றம்
அதிகாரிகள் கூறியதாவது: காண்டூர் கால்வாயில் விடுபட்ட பகுதிகள் புதுப்பிக்கும் பணி நடப்பாண்டும் துவங்கியுள்ளது. இத்திட்ட பணிகளில் இறுதி கட்ட பணியாக தற்போது நடந்து வருகிறது.கால்வாயில், 34 கி.மீ., பகுதியில், புதுப்பிக்கப்படுகிறது. இதற்காக, பழைய கால்வாய் முழுமையாக அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து, தளம் மற்றும் இரு கரைகளுக்கு பெரிய அளவிலான கம்பிகள் கட்டப்பட்டு, கான்கிரீட் அமைக்கப்படும்.வரும், ஆக.,மாதத்திற்குள் பணியை முடித்து, பி.ஏ.பி., பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.