தற்காலிக இரவு காவலர்கள் பள்ளிக்கு நியமிக்க கோரிக்கை
உடுமலை; அரசு பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காலிக இரவு காவலர்கள் நியமிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் நுாற்றுக்கும் அதிகமான அரசு பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகளில் இரவு காவலர் பணியிடங்களை பல ஆண்டுகளாக நிரப்பவில்லை. இதனால், பள்ளியின் பாதுகாப்புக்கும் எந்த உறுதியும் இல்லாத நிலைதான் தொடர்கிறது. சில பள்ளிகளில், நிர்வாகத்தினர் தற்காலிகமாக இரவு காவலர்களை நியமித்துள்ளனர். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் இந்நிலை சாத்தியமில்லாமல் உள்ளது. அரசு பள்ளிகளில் தற்போது, உயர்ரக தொழில்நுட்ப வசதிகள், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என கட்டமைப்பு நவீனமாக மாறிவருகிறது. ஆனால், கட்டமைப்புகள் அனைத்தும் பாதுகாப்பில்லாமல் உள்ளது. எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில், இடைவெளியில் மாணவர்கள் வெளியில் சென்று வந்தாலும் ஆசிரியர்களால் கண்காணிக்க முடிவதில்லை. இதனால், தற்காலிமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில் உள்ளாட்சி துறைகளின் வாயிலாக இரவு காவலர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி ஆர்வலர்களும், பெற்றோரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.