திருப்பூர்: நான்காவது குடிநீர் திட்டம் துவக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி பகுதியில் விடுபட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கும் விதமாக குழாய்கள் பதிக்கும் பணி, 48 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 4வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், வினியோக குழாய்கள் பதிக்கும் பணி, விடுபட்ட பகுதிகளில் துவங்கப்பட்டுள்ளது.அவ்வகையில், மாநகராட்சி முதல் மண்டலத்தில் சாமிநாதபுரம், பி.என்., ரோடு மயான பாதை, ஐஸ்வர்யா கேட், வேலம்பாளையம், தாய் மூகாம்பிகா நகர் ஆகிய பகுதி மேல்நிலைத் தொட்டிகளிலிருந்து குடிநீர் வினியோகம் செய்ய, 5.64 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கியுள்ளது.இரண்டாவது மண்டலம், கவிதா நகர், ஜே.ஜே.நகர், சத்யா காலனி, கவுண்டநாயக்கன்பாளையம், ஜி.என். கார்டன் பகுதியில் 9.5 கோடி ரூபாய் மதிப்பிலும், மூன்றாவது மண்டலம், வி.ஜி.வி., கார்டன், பொன்சுப்பு நகர், சந்திராபுரம் பகுதியில், 9.62 கோடி ரூபாய் மதிப்பிலும் குழாய்கள் பதிக்கப்படுகிறது.அதேபோல் நான்காவது மண்டலத்தில், சுண்டமேடு, இடுவம்பாளையம் பகுதியில் 6.82 கோடி ரூபாய்; தென்னம்பாளையம், முருகம்பாளையம், சின்னாண்டிபாளையம், மாட்டுக் கொட்டகை பகுதி தொட்டிகளிலிருந்து குழாய் பதிப்பு 6.58 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியுள்ளது. மேலும் பலவஞ்சிபாளையம் பகுதியில், 9.85 கோடி ரூபாய் மதிப்பில் குழாய் பதிக்கப்படுகிறது.மொத்தம், 48 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வினியோகத்துக்கான பணிகள், பகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டிகள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டப் பணிகள் ஒரே நாளில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஏறத்தாழ 346 கி.மீ., நீளத்துக்கு குடிநீர் வினியோக குழாய்கள் பதிக்கப்படும். விடுபட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னை இதன் மூலம் முழுமையாக தீர்வு காணப்படும். புதிய திட்டக் குடிநீர் வழங்கும் விதமாக பணிகள் துரிதமாக மேற்கொண்டு செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.