| ADDED : ஜன 24, 2024 01:31 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ சேவை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.திருப்பூர் மாவட்ட பொது சுகாதார குழு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், மருத்துவ துறை இணை இயக்குனர் கனகராணி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில அளவில் முதலிடம் பிடித்த பூமலுார் ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வெள்ள கோவில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கணியூர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், நெருப்பெரிச்சல் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, பாராட்டு சான்றிழை கலெக்டர் வழங்கினார்.அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர், கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, தினம் 2 ஆயிரம் முதல் மூவாயிரம் புறநோயாளிகள்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகள் பயன்பாட்டுக்கு நான்கு பேட்டரி வாகனங்கள், அனைத்து வார்டுகளிலும் சோலார் வாட்டர்ஹீட்டர். நோயாளிகளுக்கு மூன்றுநேரம் உணவு எடுத்துச்செல்வதற்கு சிறிய ரக வாகனம்.மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் சேகரமாகும் குப்பைகளை இருப்பு வைத்து அகற்றும் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தவேண்டும். குழந்தை திருட்டை தடுப்பதற்கு, 'ரேடியோ ப்ரீக்வென்ஸி ஐடென்டிபிகேட்டர்' தேவை.இவ்வாறு அவர் பேசினார்.நேற்றைய கூட்டத்தில், 153 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்கள், மாநில சுகாதார குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.