யங் இந்தியன்ஸ், சி.ஐ.ஐ., சார்பில், 'நம்ம திருப்பூர்; நம்ம மராத்தான்' நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. திருப்பூர் - காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்திலுள்ள ஐ-வின் டிராக் கிளப்பில், காலை, 6:00 மணிக்கு, கலை நிகழ்ச்சிகளுடன் மராத்தான் துவங்குகிறது.மூன்று பிரிவுகளில் ஓட்டம் நடைபெறும். 10 கி.மீ., ஓட்டம், ஐ-வின் டிராக்கிலிருந்து காங்கயம் மெயின் ரோடு, பிரைட் பப்ளிக் பள்ளி வரை சென்று, ஐ-வின் டிராக் வந்தடையும். 5 கி.மீ., ஓட்டம், காங்கயம் ரோட்டில், பள்ளக்காடு வரை சென்று திரும்பும். 3 கி.மீ., ஓட்டம், ராக்கியாபாளையம் சிக்னல் வரை சென்று திரும்பும்.'ஓடு… உனக்காக ஓடு; உடல் நலத்துக்காக ஓடு' என்கிற தலைப்பில் நடத்தப்படும் மராத்தானில் பங்கேற்று ஓடுவதற்காக, மூன்று பிரிவுகளிலும் மொத்தம் 3,500 பேர் பதிவு செய்துள்ளனர். பங்கேற்கும் அனைவருக்கும் டி-சர்ட், துணிப்பை, காலை உணவு மற்றும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.கலெக்டர் கிறிஸ்துராஜ், போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், எஸ்.பி., அபிஷேக் குப்தா ஆகியோரும் மராத்தானில் ஓடுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக ஓட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மராத்தானின் மூன்று பிரிவுகளிலும் முதல் பத்து இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு கூறியதாவது; திருப்பூர் மக்களின் உடல் நலன் காப்பதற்காக, 'நம்ம திருப்பூர்; நம்ம மராத்தான்' நிகழ்ச்சி நடக்கிறது. யங் இந்தியன்ஸ் அமைப்புடன், திருப்பூர் மாநகர காவல்துறையும் கரம்கோர்த்துள்ளது. சத்துள்ள உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவை, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வுக்கு, இரண்டு துாண்களாக உள்ளன.அதனால், திருப்பூர் நகர மக்கள் அனைவரும், தவறாமல் இந்த மராத்தானில் பங்கேற்று, ஆரோக்கியத்தை நோக்கிய ஓட்டத்தை துவங்க வேண்டும்.