உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டோர மரங்களை பராமரிக்க ஆர்வமில்லை; மறுநடவுக்கும் அக்கறை காட்டாத துறை

ரோட்டோர மரங்களை பராமரிக்க ஆர்வமில்லை; மறுநடவுக்கும் அக்கறை காட்டாத துறை

உடுமலை;மாநில நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டம் சார்பில், மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை மற்றும் மாவட்ட இதர ரோடுகளில், சில ஆண்டுகளுக்கு முன் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.முன்பு, இம்மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற, நெடுஞ்சாலைத்துறை நிதி பயன்படுத்தப்பட்டது. டிராக்டர்கள் வாயிலாக தண்ணீர் விட்டு, மரக்கன்றுகளை சுற்றிலும், முள் தடுப்புகள் அமைக்கப்பட்டன.உடுமலை பகுதியில், உடுமலை - பல்லடம், பொள்ளாச்சி - தாராபுரம், உடுமலை - தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள், உடுமலை - கொமரலிங்கம், உடுமலை - திருமூர்த்திமலை, அமராவதிநகர் ஆகிய மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு மாவட்ட இதர சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டன.தற்போது மரக்கன்றுகள் பராமரிப்பை, நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்வதில்லை. கடந்த சில ஆண்டுகளாக, பருவமழையும் போதிய அளவு பெய்யாததால், நெடுஞ்சாலை ஓரங்களில் நடப்பட்டு நன்கு வளர்ந்த மரக்கன்றுகள் கருகி வருகின்றன.மேலும், ரோடு விரிவாக்கத்துக்காக அகற்றப்படும் மரங்களை, மறுநடவு செய்யவும் அக்கறை காட்டுவதில்லை. உதாரணமாக, திருமூர்த்திமலை ரோட்டில், அண்ணா நகரில் இருந்து, வரிசையாக 31 மரங்கள் ரோடு விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்டு வருகிறது.இம்மரங்களின் பராமரிப்புக்காக, நெடுஞ்சாலைத்துறை எவ்வித அக்கறையும் காட்டவில்லை. ஆனால், மரங்களை வெட்டி விற்பதன் வாயிலாக, அத்துறைக்கு வருவாய் கிடைத்து வருகிறது.நீண்ட காலமாக அந்த ரோட்டில், செழித்து வளர்த்திருந்த மரங்களை விரிவாக்க பணிகள் துவங்கும் முன்பே, வேறு இடத்தில், மறுநடவு செய்வதற்கான பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கியிருக்கலாம். அல்லது முன்னதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தால், தன்னார்வ அமைப்புகள் இப்பணிகளை மேற்கொள்ள முன்வந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், இத்தகைய முன்அறிவிப்பு செய்யாமல், மரங்களை வெட்டி விற்பனை செய்துள்ளனர்.இது அனைத்து தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அகற்றப்பட்ட மரங்களுக்கு இணையாக, புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்ய மட்டுமாவது, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை