உடலிலும், அறிவாற்றல் திறனிலும் எத்தனை குறை இருந்தாலும், திடமான மனதோடும், எதிர்காலம் வசமாகும் என்கிற அதீத நம்பிக்கையோடும், சோதனைகளையெல்லாம் உதைத்து தள்ளிவிட்டு, சாதனை படைத்துவரும் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் உள்ளனர். இதற்கு, திருப்பூர் சாய் கிருபா சிறப்பு பள்ளி மாணவர்கள் சிறந்த சான்று. இப்பள்ளியில், அறிவுசார் திறன் குறைபாடுள்ள (ஆட்டிசம்) குழந்தைகள், 200 பேர் பயின்று வருகின்றனர். சரியான பயிற்சிகள் கிடைத்ததன் வாயிலாக, இந்த குழந்தைகள் பலர், டென்னிஸ், கால்பந்து, கைப்பந்து, ஜூடோ, பவுச்சி என பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஜொலிக்கின்றனர். சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில், சாய்கிருபா மாணவர்கள் ஐந்து பேர், பதக்கங்கள் வென்று திரும்பியிருக்கின்றனர். மாணவி கோகிலா, பவுச்சி விளையாட்டில் வெண்கலம் வென்றுள்ளார். கைப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய தரணி நாதன் தங்கப்பதக்கம் பெற்று சாதித்திருக்கிறார். கால்பந்து போட்டியில், ஸ்ரீ ஹரியும், டேபிள் டென்னிஸில், வசந்த்தும் வெண்கலம் வென்றிருக்கின்றனர். இதேபோல், போலியோவால் வீட்டிலேயே முடங்கி கிடந்த கவுதம், மாற்றுத்திறனாளிகள் நலம் விரும்பும் அமைப்பான 'சக் ஷம்' உதவிக்கரம் நீட்டியதால், இன்று தனியார் உணவு டெலிவெரி நிறுவனத்தில் சேர்ந்து, சுயமாக சம்பாதிக்க துவங்கியுள்ளார். திருப்பூர், காங்கயம் ரோட்டிலிருந்து, நல்லுாருக்கு, உணவு டெலிவெரி செய்வதற்காக தனது ஸ்கூட்டரில் புறப்பட்ட கவுதமை சந்தித்து பேசினோம். பிறக்கும்போதே, போலியோ பாதித்த குழந்தையாக பிறந்தேன். அப்பா பனியன் தொழிலாளி. அம்மா வீட்டிலிருந்து என்னை கவனித்துவருகிறார். இரண்டு தங்கைகள். ஒரு தங்கைக்கு திருமணம் முடித்துவிட்டோம்; மற்றொரு தங்கை நிறுவனத்தில் பணிபுரிகிறார். இரண்டு கால்களும் பாதித்து, தவழும் நிலையில், எந்த வேலைக்கும் செல்ல முடியாமல், முடங்கி கிடந்தேன். வாழ்வில் ஏதேனும் ஒரு உதவிக்கரம் கிடைக்காதா, நாமும் உழைப்பின் மூலம், சொந்தக்காலில் நிற்கவேண்டும் என ஒவ்வொரு கணமும் எண்ணிக்கொண்டிருப்பேன். ஒருநாள் என் அம்மா, சக் ஷம் அமைப்பினரை சந்தித்துவிட்டு வந்து, என்னிடம் கூறினார். எனது நிலையை பார்த்த சக் ஷம் அமைப்பினர், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர். அரசிடமிருந்து ஸ்கூட்டர் பெற்றுக்கொடுத்தனர்; அடுக்குமாடி குடியிருப்பில் வீடும் கிடைத்தது. இது எனக்கு புதிய நம்பிக்கைய அளித்தது. தனியார் உணவு டெலிவெரி நிறுவனத்தினரை அணுகி, வேலை கேட்டேன். எனது ஆர்வத்தை பார்த்த அவர்கள், வேலை கொடுத்தனர். கடந்த ஒன்றரை மாதமாக, அந்நிறுவனத்தில் சேர்ந்து, வீடு தேடிச் சென்று உணவு டெலிவெரி செய்யும் பணியில் ஈடுபட்டுவருகிறேன். தினமும், 500 முதல் 700 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். பெற்றோரையே சார்ந்திருக்காமல், சொந்த வருவாயில், எனது தேவைகளை நானே பூர்த்தி செய்வது பெருமைப்படுகிறேன். எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும், நான் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழவேண்டும்; மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டுள்ளேன். என்று தன்னம்பிக்கை ததும்ப பேசிய அவரிடம் விடைபெற்ற போது, கூண்டில் அடைப்பட்ட கிளியை, சுதந்திரமாக திறந்துவிட்டால் எந்தளவு அகம் மகிழுமோ, அத்தகைய மகிழ்ச்சியை புன்னகையை கவுதமின் முகத்தில் பார்க்க முடிந்தது. இன்று (டிச. 3ம் தேதி) உலக மாற்றுத்திறனாளிகள் தினம். ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும், நான் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழவேண்டும்; மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டுள்ளேன் - நமது நிருபர் -: