உள்ளூர் செய்திகள்

சில வரி செய்திகள்

பொங்கல் இன்னிசை விழா

'எஸ்.எஸ். டிவி., திருப்பூர் சேனல்' சார்பில், பொங்கல் இன்னிசை நிகழ்ச்சி, பல்லடம் ரோடு, பதா ஸ்டேடியத்தில் நடந்தது. மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்து, இன்னிசை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 'எஸ்.எஸ்., குழுமங்களின் நிறுவனர் செல்வராஜ், 'உயிர் ஆர்கானிக்' நிறுவனர் சுஜிதா தேவவிஷ்ணு மற்றும் தொழில்துறையினர் பங்கேற்றனர். சினிமா பாடகர் வேல்முருகன், இறையருள் பாடகர் சதாசிவம் ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சிகள், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

குழந்தை திருமணம்: விசாரணை

பல்லடம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியும், சித்திரைவேல், 19 என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த அக்., மாதம் திருமணம் நடந்தது. இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. விசாரணை மேற்கொண்ட பல்லடம் மகளிர் ஊர் நல அலுவலர் பொன்னம்மாள், குழந்தை திருமணம் நடந்ததை உறுதி செய்தார். இதனால், சித்திரை வேல், சிறுமியின் தந்தை ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. சிறுமி, திருப்பூர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட எட்டு மாவட்டங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள பேரிடர் நிவாரண நிதி போதாது, 20 ஆயிரம் கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவிநாசி ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் கோபால், வழக்கறிஞர் சுப்பிரமணியம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சண்முகம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

சேவூர் நிலக்கடலை ஏலம்

அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று முன்தினம் நடந்த நிலக்கடலை மறைமுக ஏலத்துக்கு, 172 விவசாயிகள், 1,211 மூட்டைகள் நிலக்கடலையை கொண்டு வந்திருந்தனர். முதல் ரகம் குவின்டால் 7,500 - 7,830; இரண்டாம் ரகம், 7,000 - 7,500; மூன்றாம் ரகம் 6,000 - 7,000; பச்சை நிலக்கடலை, 4,000 - 6,000 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், கொடியசைத்து, துவக்கி வைத்தார். இதில், 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், 40 கார்கள் பங்கேற்றன. கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம், நொச்சிபாளையத்தில் நிறைவடைந்தது. ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவது, சாலை விதிகளை பின்பற்றவேண்டும் என, வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முதலீட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்

விவசாய முன்னேற்ற கழகத்தினர் மற்றும் தனியார் நிறுவன முதலீட்டாளர்கள், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதலீட்டாளர்கள் சிலர் கூறுகையில், 'பி.ஏ.சி.எல்., என்ற நிறுவனத்தில், 5.85 கோடி பேர், 49.10 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தனர். இந்நிறுவனம் தொடர்பான வழக்கில், முதலீடு செய்தவர்களுக்கு, 6 மாதத்தில் பணத்தை திரும்ப வழங்க வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவுப்படி, பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்,' என்றனர்.

மின் தடை ரத்து

அவிநாசி மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பெருமாநல்லுார் துணை மின் நிலையம் மற்றும் பழங்கரை துணை மின் நிலையம் ஆகியவற்றில், நாளை (11ம் தேதி) மேற்கொள்ளப்படுவதாக இருந்த பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மங்கலம் ரோட்டிலுள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று (10ம் தேதி), காலை, 11:00 மணியளவில், மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு காணும் வகையில், மின் நுகர்வோர் கூட்டம் நடைபெறுவதாகவும், கோட்ட செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

கேன்சர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருமுருகன்பூண்டி ரோட்டரி, திருப்பூர் வடக்கு ரோட்டரி கிளப், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் திருப்பூர் தொழில் கூட்டமைப்பினர் இணைந்து, புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. ைஷனி நிட்வேர் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில், டாக்டர் அனிதாவிஜய் பங்கேற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பாலாலயம் ஆலோசனை

வெள்ளகோவில் மயில்ரங்கத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளது. திருப்பணிகள் மேற்கொள்ள கிராம மக்கள், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. அதில், பிப்., 21 ம் தேதி பாலாலயம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் விரக்தி

அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை விரைவில் கொண்டாடப்பட உள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை அடைமழை பெய்தது. விவசாயிகள் கூறுகையில், 'மார்கழி, தை மாதத்தில் அறுவடை செய்ய ஏற்ற காலநிலை நிலவும். பனிப்பொழிவு அதிகம் இருக்கும். ஆனால், காலநிலை மாறுபாட்டால் மார்கழி மாதத்தில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்துள்ள சோளப் பயிர் வீணாகி வருகிறது. மழை தொடர்ந்தால் பூஞ்சை படிந்து தீவனம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ