மேலும் செய்திகள்
குப்பை பிரச்னைக்கு 'குட் பை' சொல்வது எப்போது?
06-Sep-2025
பாலிதீன் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் தயக்கம்
08-Sep-2025
திருப்பூர் : நகர மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள கடைகளில் தடையின்றி புழங்கி வந்த, பாலிதீன் பை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம், 'பாலிதீன் பை இல்லை' என சில கடைக்காரர்கள் கூறத் துவங்கியுள்ளனர். இந்நடவடிக்கை, 'பாலிதீன் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த முன்னெடுப்பு' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மண் வளத்தை மலடாக்கி, சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பாலிதீன் பை உள்ளிட்ட பொருட்கள், கட்டுக்கடங்காமல் புழக்கத்தில் உள்ளன. சிறிய பெட்டிக்கடை துவங்கி, பெரிய மால் வரை, வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை, பாலிதீன் பையில் போட்டு வழங்குவதை தான், கடைக்காரர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.தமிழக அரசு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் பயன்படுத்த தடை விதித்துள்ள போதும், திருப்பூர் நகர மற்றும் கிராமப்புறங்களில், இந்த உத்தரவு பெயரளவில் கூட பின்பற்றப்படாத நிலையில் தான் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக, கிராம ஊராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், தங்கள் எல்லைக்குட்பட்டு கடை கடையாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். 'பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது; பாலிதீன் பையில் பொருட்களை அடைத்து வழங்கக்கூடாது' என அறிவுறுத்தி வருகின்றனர். தடையை மீறி, பாலிதின் பைகள் புழக்கத்தில் இருந்தால், அவற்றை பறிமுதலும் செய்கின்றனர். கிராம ஊராட்சி செயலர்கள் சிலர் கூறியதாவது: மண்ணில் மக்காத, ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பாலிதின் பை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த அனுமதிக்க கூடாது; கடை கடையாக ஆய்வு செய்து பாலிதீன் பை பறிமுதல் செய்ய வேண்டும். தொடர்ந்து அத்தகைய செயலில் ஈடுபடும் கடைக்காரரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, கடந்த இரு நாளாக, இப்பணியை செய்து வருகிறோம். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: சிறிய பெட்டிக்கடை துவங்கி, பூக்கடைகள், சாலையோர வியாபாரிகள், பிற கடைகள், ஓட்டல் உள்ளிட்ட அனைத்து இடத்திலும், பாலிதின் பை புழக்கத்தில் உள்ளதால், மக்களும் அதை வாங்கி பழக்கப்பட்டு விட்டனர். எந்தவொரு கடையிலும் பாலிதின் பையை பயன்படுத்தாமல், 'துணிப்பை எடுத்து வாருங்கள்' என வாடிக்கையாளர்களிடம் கூறினால், வாடிக்கையாளர்கள், பொது மக்கள் அந்த பழக்கத்துக்குள் வந்து விடுவார்கள். இதன் வாயிலாக, பாலிதீன் புழக்கம் வெகு கட்டுக்குள் வரும். திருப்பூர் மாநகராட்சியில் குப்பைக்கொட்டும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மருத்துவமனை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளும் குப்பையோடு குப்பையாக கொட்டப்படுகின்றன என, தொடர்ந்து புகார் கூறி வந்தோம். இந்நிலையில், திருப்பூர் அவிநாசி ரோடு எஸ்.ஏ.பி., சிக்னல் அருகில், சாலையோரம் மருத்துவக்கழிவுகளை கொட்டிய மருத்துவனைக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம்; 13வது வார்டு பகுதியில் அனுமதியின்றி குப்பைக் கொட்டிய பேக்கரிக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் திடக்கழிவு மேலாண்மை விதியை சரிவர பின்பற்றுவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. - சதீஷ்குமார் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்டப்பிரிவு மாநில செயலர்
06-Sep-2025
08-Sep-2025