பல்லடம்:அருள்புரத்தில், நிழற்குடை இல்லாமல் தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர்.பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரத்தில் நுாற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள், பனியன் நிறுவனங்கள், அரசு தனியார் பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன.திருப்பூர் பல்லடம்பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணை, விசைத்தறி, பனியன் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், இப்பகுதியில்மிக நெருக்கமாக வசிக்கின்றனர்.இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், அருள்புரம் பஸ் ஸ்டாப்பில், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பொதுமக்கள் கூடுகின்றனர். அருள்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திருப்பூர், பல்லடம் செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் உள்ளிட்டோர், பஸ்சுக்காக திறந்த வெளியில் நிற்க வேண்டிய அவலம் உள்ளது.ரோட்டின் இரண்டு பக்கமும் நிழற்குடை இல்லாமல், அனைவரும் ரோட்டிலேயே நின்று பஸ் ஏற வேண்டிய சூழல் உள்ளது. இதனால், வெயில், மழை என்றும் பாராமல் பொதுமக்கள் பஸ்சுக்காக ரோட்டிலேயே காத்திருந்து பஸ் ஏறுவதால், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது.எனவே தொழிலாளர், பொதுமக்களின் நலன் கருதி, அருள்புரம் பஸ் ஸ்டாப்பின் இருபுறமும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.