''தி ருத்தியமைக்கப்பட்ட, உற்பத்தியுடன் இணைந்த மானிய திட்டம் (பி.எல்.ஐ., -2.0), திருப்பூரில், செயற்கை நுாலிழை உற்பத்தியை வேகப்படுத்த சரியான பக்கபலமாக இருக்கும்'' என, ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு, 2021ம் ஆண்டு பி.எல்.ஐ., என்ற உற்பத்தியுடன் இணைந்த மானிய திட்டத்தை அறிவித்தது. அதிகபட்சம், 60 சதவீதம் வரை மானியம் பெறும் வாய்ப்பு உருவானது. திட்ட விதிமுறைகள் கடுமையாக இருந்ததால், மிகக்குறைந்த நிறுவனங்கள் மட்டுமே பயனடைந்தன. அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டும், நாடு முழுவதும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பயன்பெற இயலவில்லை. முதலீடு அதிகம் என்பதாலும், கடும் விதிமுறைகள் இருப்பதாலும், இத்திட்டத்தில் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்த்த அளவுக்கு பயன்பெற முடியவில்லை. 'பி.எல்.ஐ., -2.0' திட்டம் குறிப்பாக, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி தொழிலையும் இணைக்க வேண்டுமென ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். அப்போதுதான், புதிய திட்டம் மூலம், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி பயணத்தை துவக்க முடியும் என காத்திருந்தனர். இந்நிலையில், மத்திய அரசு பல்வேறு ஆலோசனைக்கு பிறகு, 'பி.எல்.ஐ.,' திட்டத்தில் புதிய திருத்தம் செய்து அரசு அறிவித்துள்ளது. முதலீடு வரம்பு குறைந்தது முதல் திட்டத்தின் முதலீடு, 300 கோடி ரூபாய் என்பது, 150 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 'பி.எல்.ஐ.,-2.0' திட்ட முதலீடு 100 கோடி என்பது, 50 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது; அத்துடன், விற்பனை வரம்பும் தளர்த்தப்பட்டுள்ளது. தொழில்துறையினர் அவரவர் முதலீட்டு வரம்புக்கு ஏற்ப, இரண்டு திட்டங்களாக பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. பி.எல்.ஐ., திட்ட விதிமுறைகளும், முதலீட்டு உச்சவரம்பும் தளர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த மானிய திட்டம் என்பதால், இதுவரை, புதிய தொழில் துவங்குபவருக்கு மட்டுமே இத்திட்டம் கைகொடுத்தது. தொழில் விரிவாக்கம் புதிய திருத்தம் செய்துள்ளதால், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனம், புதிய யூனிட் துவக்கவும், இத்திட்டம் மூலம் மானியம் பெறலாம். புதிய ஜவுளி பொருட்களும் இணைக்கப்பட்டுள்ளதால், செயற்கை நுாலிழை ஆடை மற்றும் தொழில்நுட்ப ஆடை உற்பத்தி வேகமாக வளர்ச்சி பெறும். உற்பத்தியுடன் இணைந்த மானிய திட்டத்தில் (பி.எல்.ஐ.,) திருத்தம் செய்துள்ளதால், செயற்கை நுாலிழை ஆடை ஏற்றுமதி வேகமாக உயருமென, ஏற்றுமதியாளர்கள் வரவேற்றுள்ளனர். செயற்கை நுாலிழைக்கான மூலப்பொருள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளும் நீங்கியுள்ளது. தரச்சான்று ஆணையும் வழங்கப்படும் என்பதால், மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் நுாலிழை தயாரிக்கலாம். நுாலிழை மட்டும் இறக்குமதி செய்து 'பேப்ரிக்' உற்பத்தி செய்யவும் திட்டமிடலாம். திருப்பூரில் உள்ள சாய ஆலைகளிலேயே, அவற்றுக்கு சாயமிட்டு பிராசசிங் செய்யவும் தொழில்நுட்பத்தை கண்டறிந்து செயல்படுத்தலாம். இதன் மூலம் புதிய நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே இயங்கி வரும் 'ஜாப் ஒர்க் ' நிறுவனங்களுக்கும் அதிகபட்ச வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், இதுதொடர்பான முதல்கட்ட கலந்துரையாடல் கடந்த வாரம் நடந்தது. இந்திய டெக்ஸ்டைல் கமிட்டி அதிகாரிகள் பலரும் பங்கேற்று, 'ஆன்லைன்' வாயிலாகவும் இத்திட்டம் குறித்து விளக்கினர். ஏற்றுமதி நிறுவனங்கள்: பயன்பெறும்: பி.எல்.ஐ., திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால், அதிகப்படியான, குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் இதன்மூலம் பயன்பெற முடியும். 'பி.எல்.ஐ., -2.0' திட்டத்தால், புதிய தொழில் அபிவிருத்தி செய்யலாம். குறிப்பாக, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி யூனிட்களை இத்திட்டம் மூலம் அமைக்க வாய்ப்புள்ளது. அதன்படி, மத்திய ஜவுளித்துறை வழிகாட்டுதலின்படி, வரும் 24ம் தேதி (நாளை) மாலை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், இதுதொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - சுப்பிரமணியன்: தலைவர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.: