| ADDED : ஜூன் 26, 2024 10:44 PM
திருப்பூர் : திருப்பூரில் இறக்குமதிப் பொருட்களை இறக்கும் கன்டெய்னர் லாரிகள், ஏற்றுமதிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு துாத்துக்குடி துறைமுகம் செல்வது தொடர்பாக சுங்கத்துறையினர் அதிரடியாக ஆய்வைத் துவக்கியுள்ளனர்.துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, திருப்பூருக்கு இறக்குமதி சரக்குகளை ஏற்றி வரும் கன்டெய்னர் லாரிகள், சரக்கை இறக்கிவிட்டு காலியாக திரும்ப வேண்டும். மாறாக, திருப்பூரில் இருந்து குறைந்த வாடகையில் ஏற்றுமதி சரக்கை ஏற்றிச்செல்கின்றன. இது குற்றச்செயல் என்றபோதிலும், இது தொடர்ந்து வந்தது. இதனால், திருப்பூர் கன்டெய்னர் லாரிகள் இயக்கம் பாதிக்கப்படுகிறது.சுங்கவரித்துறை விதிமுறைகளை மீறி, கன்டெய்னர்களை இயக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்த சுங்கவரித்துறை அதிகாரிகள், 'இறக்குமதி சரக்கை கொண்டு செல்லும் லாரிகள், ஏற்றுமதிக்கான சரக்கை ஏற்றி வருவது குற்றம்; அத்தகைய குற்றச்செயல் தொடரக்கூடாது; நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று எச்சரித்தனர்.ஏற்றுமதி சரக்கு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கூறுகையில், 'துறைமுகத்தில் இருந்து வரும் லாரிகள், சரக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போது, எங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது. முறைகேடுகள் அதிகம் நடக்கவும் வாய்ப்புள்ளது. சுங்கவரித்துறை விரிவான கள ஆய்வு நடத்தி, விதிமுறை மீறிய சரக்கை போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும்' என்றனர்.