உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீரோடைக்குள் உருவான குட்டை பல நுாறு யூனிட் கடத்தல் எதிரொலி

நீரோடைக்குள் உருவான குட்டை பல நுாறு யூனிட் கடத்தல் எதிரொலி

பல்லடம்: பல்லடம் அருகே, பல நுாறு யூனிட் மண் கடத்தப்பட்டதால், நீரோடைக்குள் புதிதாக 'குட்டை' உருவாகியுள்ளது.பல்லடம் நகராட்சி வழியாக செல்லும் நீரோடை, பல்வேறு கிராமங்கள் வழியாகச் சென்று நொய்யலில் இணைகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பச்சாபாளையம் - ஒன்பதாம் பள்ளம் வழியாக செல்லும் நீரோடையில், புதிதாக குட்டை ஒன்று உருவாகியுள்ளது.இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'இரவோடு இரவாக, நீரோடையில் இருந்து பல நுாறு யூனிட் மண் கடத்தப்பட்டுள்ளது. ஓடையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான நிலமும் உள்ளது. ஓடையில் மண் கடத்தப்பட்டதால், ஓடைக்குள் புதிதாக குட்டை ஒன்று உருவாகியுள்ளது. மேலும், ஓடையின் ஒரு பகுதியில், வாகனங்கள் வந்து செல்ல வசதியாக, தடம் அமைக்கப்பட்டு நீர்வழிப் பாதை மூடப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில், மழைநீருடன் அடித்துவரப்படும் கழிவுநீர், திசை மாறிவிளை நிலங்களுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. ஓடை மற்றும் தனியார் நிலத்தில் கனிம வளம் கடத்தியவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என, வருவாய்த் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், வருவாய் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றனர்.சமூக ஆர்வலர் அண்ணாதுரை கூறுகையில், ''பல்லடம் வட்டாரத்தில், கரடிவாவி, அனுப்பட்டி, புளியம்பட்டி, கே. அய்யம்பாளையம், கரைப்புதுார், பருவாய் என, பல்வேறு கிராமங்களிலும் மண் கடத்தல் நடந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் கடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் கனிமவளங்கள் கடத்தப்பட்ட பின்னரே வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரிகிறது. பொதுமக்களுக்கு தெரிந்த தகவல் கூட வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியாதவை ஏன்என்ற கேள்வி எழுகிறது. எனவே, கனிமவள கடத்தலுக்கு அதிகாரிகளும் துணை போவதாகவே கருதுகிறோம். இவ்வாறு, பல்லடம் நகராட்சி ஓடையில் கனிம வளங்கள் கடத்தியவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

அதிகாரிகள் மவுனம்

அதிகரிக்கும் கடத்தல்சமீபத்தில்தான், பருவாய் கிராமத்தில், கனிம வளம் கடத்தப்பட்டதன் காரணமாக, ஆழமான குட்டையில் விழுந்து சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதேபோல், தற்போது நகராட்சி ஓடையிலும், ஏறத்தாழ, 6 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று, பல்லடம் வட்டாரத்தில் கனிமவள கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், அதிகாரிகள் வழக்கம் போல மவுனம் காத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை