உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாலிதீன் கவர் பயன்பாடு இன்னும் 3 மாதத்தில் ஒழிக்கப்படும்! மாநகராட்சி துணை கமிஷனர் உறுதி

பாலிதீன் கவர் பயன்பாடு இன்னும் 3 மாதத்தில் ஒழிக்கப்படும்! மாநகராட்சி துணை கமிஷனர் உறுதி

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், இறைச்சி கடை உரிமையாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில், இறைச்சி கழிவுகள் முறையாக அகற்றுவது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைக்காரர்களுடன் ஆலோசனை கூட்டம், டவுன்ஹால் மாநாட்டு அரங்கில் நடந்தது. இதில், கோழி, ஆடு, மீன் இறைச்சி விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இறைச்சி கடைகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. * கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் (தி.மு.க.): குப்பை பிரச்னைக்கு தீர்வு காண்பதில் மக்கள் ஒத்துழைப்பு அவசியம். முதலிபாளையம், சின்னக்காளிபாளையம் பகுதி மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாநகராட்சிக்கு இல்லை. ஆனால், வேறு வழியில்லாத சூழல் தான் தற்போது ஏற்பட்டுள்ளது. இறைச்சி கடை கழிவுகளை வெளியே எறியக் கூடாது. ஊராட்சிகளில் குப்பை தரம் பிரிக்காமல் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். மாநகராட்சியில் அந்த விழிப்புணர்வு வர வேண்டும். * 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ்: நிரந்தர கடைகளை விட விடுமுறை நாட்களில் வரும் திடீர் கடைகள் தான் அதிக பிரச்னைக்கு காரணம். வியாபாரம் முடிந்து கழிவுகளை ஆங்காங்கே வீசி விடுகின்றனர். அபராதம் விதித்தால் அவர்களுக்கு சிரமம் தான். வேறு எந்தப் பயனும் இல்லை. இறைச்சி வியாபாரிகள் தங்களுக்குள் அமைப்பு ஏற்படுத்தி அனைவரையும் இணைக்க வேண்டும். ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களை பாதிக்க கூடாது. கோழி கால்களை யாருக்கும் விற்பனை செய்ய வேண்டாம். வீதிகளில் வீசுவதால் வேறு சிக்கல்களும் எழுகிறது. குப்பை எடுக்காமல் நகரில் பிரச்னை, கொண்டு சென்று கொட்டினால் அங்கும் பிரச்னை. இதற்கு தீர்வு மக்கள் ஒத்துழைப்பில் தான் உள்ளது. * துணை மேயர் பாலசுப்ரமணியம்: இறைச்சி கடைகளிலிருந்து வீசப்படும் கழிவுகள் காரணமாக தெருநாய் பிரச்னை அதிகரிக்கிறது. கடைக்காரர்கள் அமைப்பு ஏற்படுத்தி செயல்படுங்கள்; நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தருவதால், நகரம் துாய்மையடையும். பொதுமக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். குப்பை தரம் பிரித்து வழங்குவதால், பல பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். * துணை கமிஷனர், மகேஸ்வரி: கடந்த, 30 நாட்களாக நகரப் பகுதியில் கழிவுகள் அகற்றுவதில் பெரும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. நகரில், 96 செகண்டரி பாய்ன்ட்களில் தற்போது குப்பை தேங்கி கிடக்கிறது. இதற்கான தீர்வு குறித்து பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து தற்போது அதை அமல்படுத்தப்பட்டுள்ளன. குப்பைகளை உருவாக்கும் மக்கள், நிறுவனங்களுக்கு அவற்றை பிரித்து வழங்க வேண்டிய கடமை உள்ளது. அதனை கையாளும் வழிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை கையாளும் வழிமுறைகள் பின்பற்றப்படும். அவ்வகையில், இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகள் அகற்றும் நடவடிக்கையில், கடை உரிமையாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிறுவனம் தினமும் நேரடியாக வந்து கோழி கழிவுகளை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை வேறு எந்த வழியிலும் கடைக்காரர்கள் வெளியேற்றக்கூடாது. தற்போது சோதனை அடிப்படையில், கண்டறியப்பட்ட கடைகளின் அடிப்படையில் வாகனம் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி முழுமையாக செயலி மூலம் கண்காணிக்கப்படும். கடைகள் விவரங்கள், கழிவு சேகரிக்கப்பட்ட விவரம் அனைத்தும் அதில் படத்துடன் பதிவேற்றம் செய்யப்படும். இதற்காக தனி போன் எண் வழங்கப்படும். புகார் இருந்தால் அதில் தெரிவிக்கலாம்.

ஆட்டிறைச்சி கடைகள் கட்டாயம்

ஆடு வதைக்கூடத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இறைச்சி கழிவுகள் முறைப்படி மட்டுமே அகற்ற வேண்டும். தடை செய்த கவர்களைப் பயன்படுத்தாமல், துணிப்பை, இலை, பாக்கு மட்டை, பாத்திரம் போன்றவை பயன்படுத்த வேண்டும். அதிகபட்சமாக, 3 மாத காலத்துக்குள் மாநகராட்சி பகுதியில் பாலிதீன் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும். பாலிதீன் கவர்களுக்கு மாற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலிதீன் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு உள்ள இடங்கள் அதிகாரிகளுக்கு தெரியாமல் இல்லை. இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தினமும் சேகரிக்க வேண்டும்

நிரந்தர கடைகள் குறித்த விவரங்கள் நிர்வாகத்திடம் உள்ளது. விடுமுறை நாள் மற்றும் திடீர் கடைகள் குறித்து அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் அமைப்புகள் சார்பிலும் அதை முன்னெடுக்கிறோம். பாலிதீன் கவர்களுக்கு மாற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலிதீன் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு உள்ள இடங்கள் அதிகாரிகளுக்கு தெரியாமல் இல்லை. இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடுவதைக் கூடம் சென்று வருவதில் பெரும் சிரமம் உள்ளது. அதேபோல் மீன் மார்க்கெட் சிறிய வியாபாரிகள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இறைச்சி கழிவு சேகரிப்பு வாகனம் மாலை நேரம் வர வேண்டும்; தினமும் தவறாமல் சேகரிக்க வேண்டும். கழிவுகளை சேர்த்து வைப்பது சிரமம். விதிகளைப் பின்பற்றாத கடைகள் மீது சீல் வைப்பது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கை உடனே எடுக்க கூடாது. - இறைச்சி கடை உரிமையாளர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ