உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாறைக்குழியில் கொட்டுவதை தவிர...  வேறு வழியில்லை! திடக்கழிவு திட்டம் முழுமை பெறும் வரை

பாறைக்குழியில் கொட்டுவதை தவிர...  வேறு வழியில்லை! திடக்கழிவு திட்டம் முழுமை பெறும் வரை

திருப்பூர்: ''திடக்கழிவு மேலாண்மைக்குரிய செயல் திட்டத்தை, கடந்த நான்காண்டாக உருவாக்கி, தற்போது அதனை அமல்படுத்தும் நிலைக்கு வந்துள்ளோம். இது முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை, பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை தவிர வேறு வழியில்லை,'' என மேயர் தினேஷ்குமார் பேசினார். திருப்பூர் டவுன்ஹாலில், நேற்று நடந்த திடக்கழிவு மேலாண்மை ஆலோசனைக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, மேயர் தினேஷ்குமார் பேசியதாவது: திருப்பூரில் கடந்த, 40 ஆண்டுகளாக சேகரிக்கப்படும் குப்பை, பாறைக்குழிகளில் தான் கொட்டப்பட்டு வருகிறது. கோவை, சென்னை, தஞ்சை, திருச்சி போன்ற மாநகராட்சிகளுக்கு குப்பை கொட்டி கையாள பல ஏக்கர் பரப்பில் சொந்த இடம் இருக்கிறது; திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்த இடமில்லை. தற்போது, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அமைந்துள்ள இடம், திடக்கழிவு மேலாண்மை பணிக்கென மாநகராட்சியால் வாங்கப்பட்ட இடம் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சிக்கு சொந்தமாக இடுவாயில் மட்டுமே குறிப்பிட்ட அளவு இடம் உள்ளது. இதற்கிடையில், திடக்கழிவு மேலாண்மைக்குரிய செயல் திட்டத்தை, கடந்த நான்காண்டாக உருவாக்கி, தற்போது அதனை அமல்படுத்தும் நிலைக்கு வந்துள்ளோம். இது முழுமையாக நடைமுறைக்கு வரும் வரை, பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை தவிர வேறு வழியில்லை. முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டி வந்த நிலையில், அங்குள்ளவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்ததால், அங்கு குப்பைக்கொட்ட கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதனால், நகரில் தேங்கியுள்ள குப்பையை அப்புறப்படுத்த முடியவில்லை. பள்ளி வளாகம், மின் கம்பம், அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலக வளாகங்கள் உள்ளிட்ட, 93 இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. ஐகோர்ட் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியத்தினரின் வழிகாட்டுதல் படி தான், குப்பை கொட்ட இடுவாயை தேர்வு செய்ய வேண்டி நிலை ஏற்பட்டது. அங்கு சேகரிக்கப்படும் குப்பையால் அருகேயுள்ள விவசாய நிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், குப்பையில் இருந்து வெளியேறும் நீர், நிலத்தடிக்குள் செல்லாத வகையிலான மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினரின் வழிகாட்டுதல் படி, தற்காலிக அடிப்படையில், நகரில் தேங்கியுள்ள குப்பையை அங்கு தேக்கி வைப்பதை தவிர வேறு வழியில்லை. அதிகபட்சம், 6 மாதத்துக்குள் மாற்று திட்டம் தயாரித்து, குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்குரிய விரிவான செயல் திட்டத்தை ஐகோர்ட்டில் சமர்பித்துள்ளோம்.அதன் அடிப்படையில் தான் வீடுகள் துவங்கி, தொழில் நிறுவனங்கள் வரை, குப்பையை தரம் பிரித்து வாங்கும் திட்டத்தை அமல்படுத்த இருக்கிறோம்; ஒத்துழைக்காத பொதுமக்கள், இறைச்சிக்கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது கடும் அபராத நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார். திடக்கழிவு மேலாண்மைக்குரிய செயல் திட்டத்தை, கடந்த நான்காண்டாக உருவாக்கி, தற்போது அதனை அமல்படுத்தும் நிலைக்கு வந்துள்ளோம்.பள்ளி வளாகம், மின் கம்பம், அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலக வளாகங்கள் உள்ளிட்ட, 93 இடங்களில் குப்பை தேங்கி கிடக்கிறது 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி பேச்சு மேயர் பேசுகையில், ''திருப்பூரின் சுகாதாரம் சார்ந்த முக்கியமான இக்கூட்டத்தில் முக்கிய பங்காற்ற வேண்டிய பெரும்பாலான தொழில் அமைப்பினர் இக்கூட்டத்தில் பங்கேற்காதது, வருத்தமளிக்கிறது'' என்றார். நகரில் நிலவும் குப்பை பிரச்னை தொடர்பாக, அரை பக்கம் அளவுக்கு தொடர்ந்து செய்தி வெளியிடும் 'தினமலர்', திடக்கழிவு மேலாண்மையில் மாநகராட்சியின் நடவடிக்கை, அதற்கு பொதுமக்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை