| ADDED : செப் 01, 2011 02:00 AM
உடுமலை : ''உடுமலை பகுதியில் மழைப்பொழிவு சராசரி குறைந்துள்ள நிலையில், விவசாயிகள் பருவமழைக்காலங்களில், மழைநீர் சேகரிப்பில் கவனம் செலுத்தினால் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்த முடியும்,'', என மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி செல்வராஜ் பேசினார்.உடுமலை அருகே குடிமங்கலம் பட்டு வளர்ச்சி துறை ஆலோசனை மையத்தில் மத்திய பட்டு வாரியம் சார்பில் விவசாயிகள் கருத்தரங்கு நடந்தது. பட்டு வளர்ச்சி துறை ராஜேந்திரன் வரவேற்றார். கருத்தரங்கில் மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி செல்வராஜ் பேசியதாவது: உடுமலை பகுதி விவசாயிகள் தொழில்நுட்பங்களை முறையாக பின்பற்றுவதால் ஆண்டு முழுவதும் வெண்பட்டு வளர்க்கப்படுகிறது. பட்டுப்புழு வளர்ப்பை சிறு,குறு விவசாயிகள் விரிவுபடுத்த தண்ணீர் பற்றாக்குறை ஒரு காரணமாக உள்ளது.நிலத்தடி நீர் மட்டம் ஆண்டுதோறும் குறைந்து வருவதால், பட்டுப்புழு வளர்ப்பு தொழில் மட்டுமல்லாது தென்னை போன்ற பிற சாகுபடியும் பாதிக்கப்பட்டு வருகிறது. உடுமலை பகுதியில் ஆண்டிற்கு சராசரியாக 730 மி.மீ., மழை பெய்கிறது. இந்தாண்டு தற்போது வரை குறைந்தளவு மழையே பெய்துள்ளது.எனவே விவசாயிகள் நிலத்தடி நீரை வீணடிக்காமல் முறையாக பயன்படுத்த வேண்டும். மல்பெரி சாகுபடியில், ஒரு ஏக்கர் செடிகளுக்கு நேரடியாக வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ச்சும் போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். சொட்டு நீர் அமைத்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினால் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் இருந்தால் போதுமானது.தண்ணீரை வீணடிக்காமல், குறிப்பிட்ட இடைவெளிகளில் செடிகளுக்கு பாய்ச்ச வேண்டும். தென்னை சாகுபடியில் மரங்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தண்ணீர் அளவை குறைத்தாலும், விளைச்சலில் பாதிப்பு ஏற்படாது.அனைத்து மரங்களுக்கும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் பாய்ச்சும் போது வேர்கள் ஆழமாக மண்ணில் செல்லும். அதிக தண்ணீர் காரணமாக வேர்கள் மண்பரப்பில் மேலோட்டமாக பரவி பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.குடிமங்கலம் பகுதியில் பரவலாக நிலத்தடி நீர் உவர்ப்பாக காணப்படுகிறது. கோடை காலத்தில் உவர்ப்பு தண்ணீரை அதிகளவு சாகுபடிக்கு பயன்படுத்தும் போது உப்பு படிந்து மண் தன்மை பாதிக்கப்படும். இதனால், விவசாய சாகுபடிகள் பாதிக்கப்படும். எனவே கோடை காலத்தில் உவர்ப்பு தண்ணீரை குறைந்தளவே பயன்படுத்த வேண்டும்.மழைக்காலங்களில் மண் நீர்பிடிப்பு தன்மை உள்ளதாக இருந்தால், மழை நீர் வீணாக வெளியேறாது. மண்ணின் நீர்ப்பிடிப்பு தன்மையை அதிகரிக்க செய்ய பசுந்தாழ் உரங்களான தக்கை, சணப்பை ஆகியவற்றை பயிர் செய்து மடக்கி உழவு செய்ய வேண்டும்.விவசாயிகள் ஒருங்கிணைந்து சிறிய அளவிலான தடுப்பணைகள் அமைத்து மழைக்காலங்களில் வீணாக செல்லும் தண்ணீரை சேகரிக்க வேண்டும். முறையான நீர் நிர்வாகம், மழை நீர் சேகரிப்பு ஆகியவற்றை உடுமலை பகுதி விவசாயிகள் பின்பற்றினால் நிலத்தடி நீரை மேம்படுத்தி அனைத்து விவசாய சாகுபடி பணிகளையும் பாதிப்பில்லாமல் மேற்கொள்ளலாம்', இவ்வாறு பேசினார்.பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள், குடிமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.