உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

உடுமலை : கிளை வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதை அமைத்து தர வேண்டும் என அரசூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனு: மடத்துக்குளம் தாலுகா வாகத்தொழுவு கிராமம் அரசூரில் பி.ஏ.பி., பாசனத்திற்குட்பட்ட 28.6, 28.7 ஆகிய கிளை வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்காலை ஒட்டி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் காலங்களில் ஆக்கிரமிப்புகளால் மடை பகுதிக்கு கீழ்மடை விவசாயிகள் செல்ல முடிவதில்லை. பிற நாட்களில் கால்நடைகள் மற்றும் விளைபொருட்களை ஏற்றி செல்லும் வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளிக்கப்பட்ட நிலையில், நீர் வள நில வள திட்டத்தின் கீழ் வாய்க்காலில் பணிகள் மேற்கொள்ளப்படும் போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிளை வாய்க்கால் பகுதியில் உடனடியாக அளவீடு பணிகளை மேற்கொண்டு நடைபாதை அமைக்க வேண்டும், என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !