உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு

அவிநாசி : மேட்டூரிலிருந்து அரசூர் வரை உயரழுத்த மின் பாதைக்காக, அவிநாசி வட்டாரத்தில் மின் கோபுரம் அமைக்கப்படுகிறது; இப்பணி 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், சுண்டக்காம்பாளையம் முதல் ராயர்பாளையம் வரை ஒன்பது கோபுரங்கள் அமைக்க அப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த வாரத்தில் பணி மேற்கொள்ள வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.தகவலறிந்த எம்.எல்.ஏ., கருப்பசாமி, இரு தரப்பின ரையும் சமாதானப்படுத்தினார். அதில், பணியை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தும், பிரச்னையை பேசி தீர்க்கவும் முடிவானது. இதையடுத்து பணி நிறுத்தப்பட்டது. கிராமங்கள் வழியே மின் கோபுரம் அமைக்க கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:கடந்த சில மாதங்களுக்கு முன் செயற்கைக்கோள் வழியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு, அவ்வழியே கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக குழி தோண்டும் பணி நடந்த போது சிலர், இப்பாதையில் செல்லாமல் வேறு வழியாக கொண்டு செல்லுமாறு கூறி, தடுத்து நிறுத்தி விட்டனர்.திட்டமிட்ட பாதையை மாற்றி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளை நிலங்கள் பாதிக்கப்படும் வகையில், ஒன்பது டவர்கள் அமைக்கப்பட்டால், சிறு மற்றும் குறு விவசாயிகள் பாதிக்கப்படுவர். ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட வழித்தடத்திலேயே மின் கோபுரங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அமைக்காத பட்சத்தில், பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ