உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தக்காளி வரத்து அதிகரிப்பு; விலையும் சரிவால் பாதிப்பு

தக்காளி வரத்து அதிகரிப்பு; விலையும் சரிவால் பாதிப்பு

உடுமலை; உடுமலை பகுதிகளில், தக்காளி அறுவடை தீவிரமடைந்து, வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலை சரிந்து வருகிறது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. நடப்பு பருவத்தில், ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை துவங்கியுள்ளது. உடுமலை நகராட்சி சந்தை மற்றும் கிராமங்களிலுள்ள விற்பனை மையங்களுக்கு, தினமும், தலா, 14 கிலோ கொண்ட, 1.50 லட்சம் பெட்டிகள் வரை வரத்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து, தக்காளி வரத்து உள்ளதால், உடுமலை சந்தைக்கு கேரளா மற்றும் பிற மாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. இதனால், கடந்த மாதம், ஒரு பெட்டி, 600 ரூபாய் வரை விற்ற நிலையில், கடந்த சில நாட்களாக விலை சரிந்து, ஒரு பெட்டி, ரூ. 100 முதல், 300 வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால், விவசாயிகள் பாதித்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: நடப்பு பருவத்தில் நடவு செய்த போது மழை, வளர்ச்சி பருவத்தில் கடுமையான வெயில் மற்றும் காற்று அதிகரிப்பு என, சீதோஷ்ண நிலை மாற்றம், வைரஸ் நோய், ஊசி புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக, மருந்து செலவு அதிகரித்ததோடு, மகசூலும் குறைந்துள்ளது. தக்காளி சாகுபடிக்கு, ஏக்கருக்கு, ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது மகசூல் குறைந்துள்ள நிலையில், விலையும் சரிந்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. நோய் தாக்குதல் மற்றும் விலை கிடைக்காததால், வீணாக கொட்டும் நிலையும் உள்ளது. இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை