துங்காவி ரோட்டில் மரக்கன்று நடவு; நெடுஞ்சாலைத்துறை ஏற்பாடு
உடுமலை; பருவமழைக்குப்பிறகு, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், ரோட்டோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை ஒரு பகுதி, மாவட்ட முக்கிய ரோடு உள்ளிட்ட ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த ரோடுகளில், பருவமழைக்கு பிறகு ரோட்டோரத்தில், வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறாக இருந்த, புதர் அகற்றப்பட்டது. தற்போது, ரோட்டோரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.மாவட்ட இதர சாலை பிரிவில் பராமரிக்கப்படும், துங்காவி - மடத்துக்குளம் ரோட்டில், புங்கன், அரச மரம், பாதானி, நாவல் பழம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர்.மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், பசுமை வலையும் அமைக்கப்பட்டு வருகிறது. உட்கோட்டத்திலுள்ள அனைத்து ரோடுகளிலும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.