உடுமலை;தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நிதிஒதுக்கீடு இல்லாததால், உடுமலை நாற்றுப்பண்ணையில் மரக்கன்றுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீரை அதிகரிக்க, மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அரசின் ஒரு திட்டமாக, வேலை உறுதி திட்டத்தில், மரக்கன்றுகள் வளர்ப்பு ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.ஆண்டு தோறும், பத்து முதல் 12 ஆயிரம் மரக்கன்றுகள் வரை அரசு இலக்கு நிர்ணயிக்கிறது. உடுமலை ஒன்றியத்தில், 76 குளங்கள் தவிர, பொது இடங்கள், மற்றும் பூங்காக்கள், பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.உடுமலை ஒன்றியத்துக்கென பொதுவான நாற்றுப்பண்ணை, போடிபட்டியில் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது.அரசின் சார்பில், மரக்கன்றுகள் வளர்ப்புக்கான நாற்று பண்ணைகள் அமைப்பதற்கு, நிதிஒதுக்கீடு ஒவ்வொரு வட்டாரத்துக்கும் வழங்கப்படுகிறது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நியமிக்கப்படும் பணித்தள பொறுப்பாளர்கள், இந்த பண்ணைகளை மேற்பார்வையிட்டு, பணிகளை கவனிக்கின்றனர்.தொடர்ந்து, விதைகளை நாற்றுகளாக மாற்றி, பராமரித்து, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த இலக்குக்கு ஏற்ப, பருவமழை காலங்களில் மரக்கன்றுகளை தயார்நிலையில் வைக்கின்றனர்.வேம்பு, புளி, அரசமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள், பழவகை மரக்கன்றுகளும் நாற்றுப்பண்ணையில் தயார்படுத்தப்படுகின்றன.பருவமழை காலங்களில் விவசாயிகள் மட்டுமின்றி, தன்னார்வலர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் ஆர்வமுடன் பெற்றுச்செல்கின்றனர்.இந்நிலையில், பல மாதங்களாக மரக்கன்று பராமரிப்புக்கான நிதிஒதுக்கீடு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே வழங்கிய நிதிஒதுக்கீட்டில், தயார்படுத்தப்பட்ட மரக்கன்றுகள் மட்டுமே தற்போது நாற்றுப்பண்ணையில் உள்ளது.சராசரியாக தற்போது 15 ஆயிரம் மரக்கன்றுகள் மட்டுமே இப்போது உள்ளது. நிதி இல்லாததால், புதிதாக மரக்கன்றுகள் போடுவதற்கும் வழியில்லாமல் திட்டம் முடங்கியுள்ளது.தென்மேற்கு பருவமழை, உடுமலை சுற்றுப்பகுதியில் பரவலாக இருந்தும் புதிய மரக்கன்றுகள் தயார்படுத்த முடியாமல் உள்ளது.குறிப்பிட்ட கன்றுகள் மட்டுமே இருப்பதால், மரக்கன்று கேட்டுவரும் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.வடகிழக்கு பருவமழைக்கு முன், மரக்கன்றுகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென விவசாயிகள், வலியுறுத்தியுள்ளனர்.