உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வட்டமலைக்கரை அணை நீர்மட்டம் 10 அடியாக உயர்வு

 வட்டமலைக்கரை அணை நீர்மட்டம் 10 அடியாக உயர்வு

வெள்ளகோவில்: வட்டமலைகரை அணையில் நீர்மட்டம் 10 அடியளவுக்கு உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளகோவில் அருகே வட்டமலைக்கரை அணை, 1980ம் ஆண்டு, 700 ஏக்கர் பரப்பளவில், 26 அடி உயரம் நீர் தேங்கும் வகையில் கட்டப்பட்டது. அணையில், 0.53 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு வைத்து பாசனத்துக்கு திறக்கப்படும் வசதி உள்ளது. அணையில் நீர் தேங்கினால், வெள்ளகோவில், தாசநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், புதுப்பை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டது. 'அணைக்கு பி.ஏ.பி. திட்டத்தில் உபரி நீர் பெறும் போதும், ஆண்டுதோறும் 15 நாட்களுக்கு, 250 கன அடி வீதம் நீர் வழங்கவும் விதி உள்ளது. பல்லடம் அருகேயுள்ள கள்ளிப்பாளையம் ஷட்டரிலிருந்து இந்த அளவு நீர் திறக்கப்பட வேண்டும். இதில் 1996ம் ஆண்டுக்கு பின் இதுவரை ஒருமுறை கூட நீர் திறக்கப்படவில்லை' என்பது இப்பகுதி விவசாயிகளின் ஆதங்கம். அமைச்சர் சாமிநாதனை, விவசாயிகள் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். இதனால், 9ம் தேதி, தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கள்ளிபாளையத்தில் வினாடிக்கு 240 மில்லியன் கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் நான்கு நாளுக்குப் பின் தற்போது தான் அணையை வந்தடைந்துள்ளது. வினாடிக்கு 220 மில்லியன் கன அடி என்ற அளவில் வந்த நீர் தற்போது அணையில் 10 அடி உயரத்தை எட்டியுள்ளது. அணை முழுவதும் நிரம்பும் வகையில், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அணைப்பகுதி முழுவதும் நீண்ட காலமாக வறண்டு கிடந்தது. அணையில் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்படுகிறது. அணைக்கு நீர் வர ஏற்பாடு செய்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், அணை முழுமையாக நிரம்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை