| ADDED : ஜன 29, 2024 12:09 AM
பல்லடம்:பல்லடம் அருகே, தனியார் 'டிவி' நிருபர் ஒருவர், கூலிப்படையினர் சிலரால் கொடூரமாக தாக்கப்பட்டார்; படுகாயமடைந்த அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுதொடர்பான விசாரணைக்கு இடையே, ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி.,க்கள் மற்றும் பல்வேறு உட்கோட்ட டி.எஸ்.பி.,க்கள் உள்ளிட்டோர் பல்லடத்தில் முகாமிட்டுள்ளனர்.பல்லடத்தில் எங்கு பார்த்தாலும் போலீஸ் வாகனங்களே தென்படுகின்றன. கள்ளக்கிணறில், நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தமிழகமே பரபரப்புக்கு உள்ளாகியது. தற்போது, மீண்டும் அதேபோன்ற சூழல் நிலவி வருகிறது. மூன்று நாட்கள் கடந்தும், போலீசார் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் உள்ளனர்.நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள், சமூக வலைதளங்களில் கடந்த மூன்று நாட்களாக வேகமாக பரவி வருகின்றன.விசாரணை துவங்கிய போது, காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.விசாரணை துவங்கியது முதல் ஐ.ஜி., பவானீஸ்வரி, பல்லடத்தில் தான் முகாமிட்டுள்ளார். மேலும் தாமதிக்காமல், மாவட்ட போலீசார் இச்சம்பவம் தொடர்பான விசாரணை குறித்தும், நடந்த சம்பவம் குறித்தும் விளக்க வேண்டும். இது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.