திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'முதல்வர் படைப்பகம்' அமைக்கலாம் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.: திருப்பூர் கலெக்டர் அலுவலக கட்டடத்தில், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகம் செயல்படுகிறது. இத்துறை சார்பில் கடந்த நான்காண்டாக, போட்டி தேர்வுக்குரிய பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அங்குள்ள நுாலகத்தில் தினசரி நாளிதழ்கள், வார, மாத இதழ், போட்டி தேர்வுக்குரிய புத்தகங்கள் என அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன. தினசரி, 50 பேர் அந்த நுாலகத்தில் அமர்ந்து படிக்கின்றனர்; பலர், போட்டி தேர்வுக்கும் தயாராகின்றனர். மேலும், வேலைவாய்ப்புத்துறை சார்பில், போட்டி தேர்வு தொடர்பான பயிற்சி ஆண்டு முழுக்க வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 3,000க்கும் மேற்பட்டோர் போட்டி தேர்வுக்குரிய பயிற்சியில் பங்கெடுத்து, தேர்வெழுதியுள்ளனர்; இதுவரை, 68 பேர் அரசுப்பணிக்கும் தேர்வாகியுள்ளனர். போட்டி தேர்வை எதிர்கொள்வதற்கான சிறந்த கற்றல் மையமாக அந்த இடம் அமைந்திருக்கிறது. தமிழக அரசின் 'நான் முதல்வன்' உள்ளிட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டங்கள், வேலை வாய்ப்புத்துறையினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் படைப்பகத்தையும் அந்த இடத்தில் அமைப்பது தான் சிறந்தது என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். காலி கட்டடங்களை பயன்படுத்தலாமே! மொத்தம், ஏழு மாடியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறை அலுவலகங்களும் செயல்படுகின்றன. இதில், பல கட்டடங்கள் காலியாக உள்ளன. தற்போது கூட, அங்கு செயல்பட்டு வந்த, தொழில் துறை அலுவலகம், அவிநாசி ரோடு, குமார் நகர் அருகே கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த அத்துறை சார்ந்த, அலுவலக கட்டடங்கள் காலியானது. இதுபோன்று காலியாக உள்ள கட்டடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதியுடன் 'முதல்வர் படைப்பகம்' ஏற்படுத்தலாம் என்ற யோசனையும் எழுந்துள்ளது. படைப்பகத்தில் என்ன இருக்கும்? இது, தமிழக அரசின் ஒரு திட்டம். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும், வளர்ந்து வரும் தொழில் முனைவோம் இணையம் உள்ளிட்ட பிற தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வழியாக, தங்களின் அறிவாற்றலை பெருக்கி கொள்வதற்குரிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இலவச 'வை பை', படிக்க வசதியான சூழல் உள்ளிட்டவையும் ஏற்படுத்தி கொடுக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே, கலெக்டர் அலுவலக வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் இத்தகைய பயிற்சி திறம்பட வழங்கப்பட்டு வரும் நிலையில், அங்கு முதல்வர் படைப்பகமும் உருவாக்கப்பட்டால், போட்டி தேர்வு எதிர்கொள்வோருக்கு கூடுதல் பலன் கிடைக்கும். -- கால்நடை மருத்துவமனை வளாகத்தில் எதிர்ப்பை மீறி பணிகள் துவக்கம் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. கடந்த, 1926ல் விட்டல் தாஸ் சேட் என்பவர், கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு, தனது, 1.96 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். தானமாக வழங்கப்பட்ட இடத்தை, வேறு பணிகளுக்கு ஒதுக்கக்கூடாது என்ற உத்தரவும் உள்ளது. தானமாக வழங்கப்பட்ட இடம், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என கூறி, மருத்துவமனை வளாகத்தில் ஒரு பகுதியில், 'முதல்வர் படைப்பகம்' கட்டுவதற்காக திட்டமிடப்பட்டு கடந்த மாதம் பணிகள் துவங்கின. இதற்காக, பசுமை நிறைந்த மரத்தையும் வெட்டி சாய்த்தனர். இதுதொடர்பாக 'தினமலர்' நாளிதழில் கடந்த நவ. 28ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பணிகள் கைவிடப்பட்டிருந்தது. வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்று பா.ஜ., மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்டோர் கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர். இந்நிலையில், தற்போது மாநகராட்சி நிர்வாகம் அங்கு கட்டடம் கட்டுவதற்கான 'பென்சிங்' பணிகளை நேற்று மீண்டும் துவங்கியது. இதை கேள்விப்பட்டு விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து பணிகளை மேற்கொண்டால், அடுத்த கட்ட நடவடிக்கை, போராட்டத்தில் இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். --- திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில், முதல்வர் படைப்பகம் கட்டுவதற்கான முதற்கட்டப்பணிகள் துவங்கியுள்ளன.