மகளிர் குழு கைவினைப்பொருட்களுக்கு அங்காடி; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உடுமலை; உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான கைவினைப்பொருட்கள் அங்காடி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், உடுமலை குடிமங்கலம் சுற்றுப்பகுதியில், 800க்கும் அதிகமான மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. பெண்களுக்கான கைப்பைகள், அலங்கார பொருட்கள், தென்னை நார் பொருட்கள், அணிகலன்கள், இயற்கை பொருட்களை இக்குழுவினர் தயாரித்து வருகின்றனர். உடுமலை பஸ் ஸ்டாண்டில், அதற்கான மையம் சில ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாமலும், கைவினைப் பொருட்கள் அங்காடியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை இல்லாமலும், செயல்பாடில்லாமல் வணிக கடை மூடப்பட்டது. உடுமலை மட்டுமின்றி, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதி குழுவினரின் கைவினைப்பொருட்களும் சந்தைப்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மகளிர் குழுவினர் கூறியதாவது: மகளிர் குழு பொருட்கள் தயாரிப்பதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் வணிக கடைகள் உள்ளன. ஆனால், சிறிய குழுக்கள் செய்யும் பொருட்களை காட்சிப்படுத்தவும், அவ்வப்போது சிறப்பு சலுகைகள் வழங்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் எந்த நடவடிக்கையும் மகளிர் திட்டம் எடுக்கவில்லை. உடுமலையில், ஒருங்கிணைந்த மகளிர் குழு கைவினைப்பொருட்கள் விற்பனை மையம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு, கூறினர்.