திருச்சி : ஏ.டி.எம்.,களில் நிரப்ப கொடுத்த பணத்தை, நிரப்பாமல், 70.77 லட்சம் ரூபாயை கையாடல் செய்த மூவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, கருமண்டபம் விஸ்வாஸ் நகரில், ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்பும், ஹிட்டாச்சி கேஸ் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்,ஏ.டி.எம்.,களில் நிரப்ப கொடுத்த பணத்தை குறைவாக நிரப்பி, 70 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.இது குறித்து, ஹிட்டாச்சி நிறுவன திருச்சி கிளை மேலாளர் சார்லஸ், மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, நிறுவனத்தில் பணியாற்றும் சக்திவேல், பூவேலன், கோவிந்தராஜ் ஆகியோரை விசாரித்தனர். விசாரணையில், ஏ.டி.எம்.,களில் நிரப்ப கொடுத்த பணத்தை முழுதும் நிரப்பாமல், முழுதும் நிரப்பியதாக அறிக்கை கொடுத்து, மூவரும் சேர்ந்து, 70.77 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.குற்றப்பிரிவு போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பணம், வங்கி இருப்பு, மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.