திருச்சி: திருச்சி சிறப்பு முகாமில் உள்ள வெளிநாட்டினர், தங்கள் நாட்டுக்கு அனுப்ப வலியுறுத்தி ரகளையில் ஈடுபட்டு, முகாம் கதவை உடைத்ததால், 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை அடைத்து வைக்க, திருச்சி மத்திய சிறை வளாகத்தில், சிறப்பு முகாம் உள்ளது. இங்கு தற்போது, 150க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்நிலையில், நைஜீரியா, உகாண்டா, கானா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடந்த சில நாட்களாக தங்களின் நாடுகளுக்கு அனுப்ப வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்கள், சிறப்பு முகாம் கதவு மீது கற்களை வீசி, தாக்கி ரகளையில் ஈடுபட்டனர். இதில், முகாமின் கதவு உடைந்தது. இதையடுத்து அங்கு வந்த மாநகர போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, போராட்டத்தை கைவிட வைத்தனர். சிறப்பு முகாம் கதவை உடைத்த, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த, 9 பேர் உட்பட, 11 பேர் மீது, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.