| ADDED : ஜூன் 30, 2024 02:16 AM
குடியாத்தம், ஜூன் 30-திருப்பத்துார் டவுன் பகுதியில் சில நாட்களுக்கு முன் சிறுத்தை புகுந்து, ஒருவரை தாக்கியதில் காயமடைந்தார். மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தை, தமிழக - ஆந்திர எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் வேலுார் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த, தமிழக - ஆந்திர வனப்பகுதியை ஓட்டிய, காந்திகணவாய் வனப்பகுதியில், சில வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. கடந்த வாரம் மேய்ச்சலுக்கு சென்ற இரு ஆடுகளை கொன்றது. நேற்று முன்தினம் மாலை, மலையடிவாரத்தில் விவசாயி ஒருவரின் கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது. குடியாத்தம் ரேஞ்சர் வினோபா, வனத்துறையினர் அங்கு விரைந்தனர். கன்றுக்குட்டியின் உடலை மீட்டு, கல்லப்பாடி கால்நடை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இரையை வேட்டையாட முதலில் கழுத்து பகுதியைதான் சிறுத்தை தாக்கும். ஆனால், கன்றுகுட்டியின் வயிற்றில் தாக்கப்பட்டுள்ளதால், உடற்கூறாவுக்கு பிறகே விபரம் தெரியவரும். கிராம மக்கள் இரவில் வெளியில் நடமாட வேண்டாம். வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம்' எனக்கூறினர். இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் இடங்களில், கூண்டுகள் வைக்கும் பணியை வனத் துறையினர் தொடங்கியுள்ளனர்.