| ADDED : ஜூலை 05, 2024 09:48 PM
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், போலி ஆவணங்களால் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளதாக, தணிக்கையின் போது தெரிந்தது. அதில், அரசுக்கு சொந்தமான, 8.73 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை பலருக்கும் போலியான ஆவணங்களால் பத்திரப்பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து பொறுப்பு சார் - பதிவாளராக இருந்த சிவக்குமார், ஜூன், 13ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் தாரை வார்த்த 8.73 ஏக்கர் அரசு நிலத்தை கண்டறிந்து மீட்கும், பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் - பதிவாளர் சிவக்குமார், காட்பாடி சார் - பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட இரு கிராமங்களில், 100 ஏக்கர் அரசு நிலத்தை, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என, 15 பேருக்கு தானமாக பதிவு செய்து கொடுத்துள்ளார்.இதற்காக அந்த நபர்களிடம், சிவக்குமார் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்றதும் தெரிய வந்தது. 100 ஏக்கர் அரசு நிலத்தை, சட்ட விரோதமாக பதிவு செய்தது தொடர்பான ஆவணங்கள், கலெக்டர் சுப்புலெட்சுமிக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.மேலும், மோசடியாக பதிவு செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்க, அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.