உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு வேலுார் கலால் டி.எஸ்.பி., டிஸ்மிஸ்

செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு வேலுார் கலால் டி.எஸ்.பி., டிஸ்மிஸ்

வேலுார்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலுாரைச் சேர்ந்த பா.ம.க., பிரமுகர் சின்னபையன், 2015 மே மாதம் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், சின்னப்பையன் கோழிப்பண்ணையிலிருந்து, வேலுார் மாவட்ட கலால் பிரிவு டி.எஸ்.பி., தங்கவேலு, 7 டன் செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்றதும், இவ்விவகாரத்தில் கடத்தல் கும்பல் சின்னப்பையனை கொன்றதும் தெரிந்தது.இது தொடர்பாக, போளூரைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்கவேலு உதவியுடன், செம்மரக் கட்டைகளை கடத்தியதாக கூறினர். மேலும், அவர்கள் தகவலின்படி, வேலுார், அலமேலுமங்காபுரம் நாகேந்திரன், அவர் மனைவி ஜோதிலட்சுமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.நாகேந்திரன் வீட்டிலிருந்து, 3.50 டன் செம்மரக்கட்டை, 32 லட்சம் ரூபாய், மூன்று கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களும், டி.எஸ்.பி., தங்கவேலு கூறியதன்படி, செம்மரக்கட்டைகளை கடத்தி, பங்கிட்டுக் கொண்டதாக தெரிவிக்கவே, டி.எஸ்.பி., கைது செய்யப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஆம்பூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், தங்கவேலுவை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை