விழுப்புரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., வேட்பாளர் சிட்டிங் எம்.பி., ரவிக்குமார், அ.தி.மு.க., பாக்கியராஜ், பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளராக முரளிசங்கர் ஆகியோருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இதில், கிராமப் பகுதிகளில் பா.ம.க., விற்கு செல்வாக்கு உள்ளது. இந்த பகுதிகளில் பா.ம.க., ஆதரவு ஓட்டுகளை அ.தி.மு.க., விற்கு மடை மாற்றினால் தங்கள் வேட்பாளருக்கு வெற்றி கிடைக்கும் என்று அ.தி.மு.க., நிர்வாகிகள் நினைக்கின்றனர்.அதற்கு தகுந்தாற்போல் மாஜி அமைச்சர் சண்முகம் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் கொண்டு வர உதவி புரிந்துள்ளார். இதற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பல தருணங்களில் சண்முகத்தை பாராட்டியிருக்கிறார்.இதையே தேர்தல் யுக்தியாக வைத்து பா.ம.க., செல்வாக்குள்ள பகுதிகளில் தனியாக இடஒதுக்கீடு வழங்குவதற்கு காரணமான சண்முகத்திற்கு ஆதரவு தரும் வகையில் அ.தி.மு.க., விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கிராமங்கள் தோறும் உள்ள முக்கிய பிரமுகர்களை தனியாக சந்தித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.அதே போல் வி.சி., கட்சி செல்வாக்குள்ள ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளில், பானை சின்னத்திற்கு செல்லும் ஓட்டுகளைக் கவரும் வகையில், அங்குள்ள அ.தி.மு.க., பிரமுகர்களை வைத்து கவனிப்பு நடத்தி, ஓட்டை அ.தி.மு.க., பக்கம் திருப்பும் முயற்சியில் அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.இதைத் தெரிந்து கொண்ட வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன், ஒரு குடும்பத்தில் நான்கு ஓட்டுகள் இருந்தால், நான்கு ஓட்டும் வி.சி., கட்சிக்குதான் போட வேண்டும். வேறு யாருக்கும் போடக்கூடாது என பேசியுள்ளார்.இதன் காரணமாக விழுப்புரம் லோக்சபா தொகுதியில், வி.சி., கட்சிக்கும், அ.தி.மு.க., கட்சிக்கும் இடையே யார் வெற்றி கோட்டை தொடுவது என்று பலத்த போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளின் தேர்தல் வியூகங்களை உடைத்து, பா.ம.க., வேட்பாளர் வெற்றிக்கோட்டை தொடுதற்கு கடும் முயற்சி எடுக்க வேண்டும்.