விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், டிரைவிங் லைசன்ஸ் நகல் வழங்குவதில் நடைபெறும் முறைகேடு குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.இது குறித்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் குமார் தலைமையில், அந்த கட்சியினர் அளித்த மனு:விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பொது மக்கள் பலர் வருகின்றனர்.அவர்களுக்கு, டெஸ்ட் வைத்து, அரசு விதிகள்படி ஒரிஜினல் ஓட்டுநர் உரிமம், அரசு நிர்ணயித்த தொகை வசூலித்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு, சென்னையில் உள்ள பன்டான் சாப்ட்வேர் என்ற தனியார் நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து, அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கி வருகிறது.ஆனால், ஒரிஜினல் லைசன்ஸ் அட்டை போல், நகல் லைசன்ஸ் அட்டை வழங்குவதற்கும் கூடுதலாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 3 வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களிலும், ஸ்மார்ட் கார்ட் ஓட்டுநர் உரிமம் வழங்குவதுடன், அதற்கான நகலும் கட்டாயமாக வழங்கி 100 ரூபாய் வீதம், விதிகளை மீறி வசூல் செய்து வருகின்றனர்.இதன் மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய் வரை வசூலாகிறது. இதனால், அரசுக்கு இழப்பும், இதனை நம்பியுள்ள பிற ஜெராக்ஸ், பிரிண்ட் கடையினரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.