| ADDED : ஜூலை 16, 2024 12:20 AM
மரக்காணம்: மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் கழுவெளி ஏரியில் உயர் மட்ட மேம்பாலம் அமைத்துதர கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம், நடுக்குப்பம், கோட்டிக்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுவெளி ஏரியில் உயர் மட்டமேம்பாலம் அமைத்து தர கோரி மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதனைத் தொடர்ந்து, தாசில்தார் பாலமுருகனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் வண்டிப்பாளையம் கழுவெளி ஏரியை இணைக்கும் இடத்தில் அரசு தடுப்பணையை உயரமாக கட்டியதால் கழுவெளியில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது.இதனால், வண்டிப்பாளையத்தில் இருந்து அனுமந்தை செல்லும் சாலையில் உள்ள தரைபாலம் நீரில் மூழ்கி, பல மாதங்களாக அந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக புதுச்சேரி செல்ல மரக்காணம் வழியாக 40 கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவசர கால தேவையின் போது பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளடக்கிய குழு அமைத்து, கழுவெளி நிலத்தைக் கடந்து செல்வதற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.