| ADDED : மே 06, 2024 05:18 AM
விழுப்புரம், : விழுப்புரம் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், தனியார் நிறுவனம் மூலம் இலகு ரக ராக்கெட் மற்றும் ரோபோக்கள் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.ஏரோகிரீன் டெக்னாலஜிஸ் என்ற தனியார் தொழில் நிறுவனம், பேரிடர் காலம் மீட்பு மற்றும் அவசர உதவிக்கு தேவைப்படும் இலகு ரக ராக்கெட் மற்றும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது. இந்த திட்டத்தை மேம்படுத்த, விழுப்புரம் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லுாரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் அன்பழகன், கல்லுாரி தலைவர் சரவணன், ஏரோகிரீன் டெக்னாலஜிஸ் தொழில் நிறுவன தலைவர்கள் ராஜமனோகரன், கோவிந்தராஜ் முன்னிலையில், ஒப்பந்தம் கையெழுத்தானது.இது குறித்து அந்நிறுவன தலைவர்கள் கூறுகையில், 'விண்வெளி ஆய்வு தொடர்பான சவால்களை எதிர்கொள்வதன் மூலம் தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்துகிறோம். அதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறோம்.அந்த வகையில், எங்கள் தனியார் நிறுவனம், புதிய இலகு ரக ராக்கெட் மற்றும் ரோபோக்கள் ஆராய்ச்சியை தனியார் கல்லுாரியில் மேற்கொள்ள இருக்கிறது.இந்த ஒப்பந்தத்தின்படி, கிராமப்புற மாணவர்களின் விண்வெணி துறை சார்ந்த அறிவு மற்றும் திறமையை ஊக்கப்படுத்தவும், திறன் வாய்ந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, பொறியியல் கல்லுாரியைச் சேர்ந்த மாணவர்களின் பன்முகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த வகை கண்டுபிடிப்புகள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது' என்றனர்.