| ADDED : ஜூலை 02, 2024 11:37 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தொழில் போட்டியால் புதிதாக தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தியவரிடம் தகராறு செய்து கடையை அடித்த நொறுக்கியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், நேருஜி சாலையில், தி.மு.க., நகர அலுவலகம் எதிரே சிலர், சாலையோரம் தள்ளுவண்டி உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர். அங்குள்ள சில கடைகள் மூடப்பட்டுள்ளதால், அதன் எதிரே புதிதாக ஒருவர் தள்ளுவண்டி கடை வைத்து இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று இரவு 9:00 மணிக்கு, அங்குள்ள பழைய தள்ளு வண்டி கடைக்காரர்கள் சிலர் புதிதாக தள்ளுவண்டியில் கடை நடத்தியவரிடம், இங்கு ஏன் கடை வைத்துள்ளீர்கள் என கேட்டு தகராறு செய்து, கடையை அடித்து நொறுக்கி, பொருள்களை சாலையில் வீசினர். தகவலறிந்து வந்த விழுப்புரம் டவுன் போலீசார், சம்பவம் குறித்து, விசாரணை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.