| ADDED : மே 03, 2024 12:13 AM
திண்டிவனம்: திண்டிவனம் தி.மு.க., நகராட்சி கவுன்சிலராக இருந்தும் காலணி தைக்கும் தொழிலை தொடர்கிறார்.திண்டிவனம் நகராட்சி 10வது வார்டிற்கு உட்பட்ட டி.வி., நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர், 49; தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் செருப்பு தைக்கும் தொழிலாளி. கடந்த உள்ளாட்சி தேர்தலில், 10வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.திண்டிவனம் மசூதி வீதியிலுள்ள காலணி தைக்கும் கடையில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டும், இன்று வரை அதே தொழிலை ஆர்வமுடன் செய்து வருகிறார்.ஆளுங்கட்சி கவுன்சிலர் என பலர் பந்தாவுடன் வலம் வரும் நேரத்தில், தன்னுடைய வீடு அமைந்துள்ள உதயம் நகரிலிருந்த டி.வி.எஸ்., மொபட்டில்தான் வேலைக்கு வருகிறார்.இதுபற்றி பாஸ்கர் கூறுகையில், 'நான் கடந்த 30 ஆண்டுகளாக காலணி தைக்கும் தொழிலை செய்து வருகிறேன். கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, வார்டு பொது மக்களின் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றி வருகிறேன். என்னுடைய குடும்ப வருமானத்திற்காக தொடர்ந்து இந்த தொழிலை செய்து வருகிறேன்' என்றார். கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டும், தொடர்ந்து காலணி தைக்கும் தொழிலில் பாஸ்கர் ஈடுபட்டு வருவது, நகர மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.