| ADDED : மே 26, 2024 05:36 AM
வானூர்: ஆரோவில் கிராம செயல்வழிக்குழு அலுவலத்தில் நடந்த சிறுவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.வானூர் அடுத்த இரும்பை ரோட்டில் உள்ள ஆரோவில் கிராம செயல்வழிக்குழு சார்பில், கடந்த மாதம் 24ம் தேதி சிறுவர், சிறுமியர்களுக்கான கோடை பயிற்சி முகாம் துவங்கி நடந்து வந்தது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு பயிற்சிகளை கற்றுக்கொண்டனர்.இதில் குழு விளையாட்டுகள், செஸ், கேரம், கைப்பந்து, எறிபந்து உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகளும், வர்ணம் தீட்டுதல், படம் வரைதல், கதை அமைத்தல் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழாவில், மாவட்ட சமூக நலத்துறை இயக்க ஒருங்கிணைப்பாளர் கெஜலட்சுமி, ஆரோவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வானூர் அரசு மருத்துவமனை டாக்டர் அரவிந்தகுமார் சுகாதாரமான பழக்கங்கள், சத்துணவு, அரசின் குழந்தைகளுக்கான சுகாதாரத் திட்டங்கள் குறித்தும், ஆரோவில் ஆரோக்கிய மைய ஆரோசுகன் கண்பாதுகாப்பு, கண் யோகா குறித்தும், ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பு மோரிஸ், ஆளுமை வளர்ச்சி சமத்துவம், தகவல் பரிமாற்றம் குறித்தும் பேசினார்.