| ADDED : ஜூன் 24, 2024 06:04 AM
விழுப்புரம் : தளவனுாரில் உடைந்த தடுப்பணையை புதிதாக கட்டித்தர வேண்டும் என லட்சுமணன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.சட்டசபையில் அவர் பேசியதாவது:விழுப்புரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோலியனுார் ஒன்றியத்தில், தளவானுார் கிராமத்தில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தென்பெண்ணை ஆற்றில் புதியதாக கட்டப்பட்ட தடுப்பணை ஒரே ஆண்டில் சேதமடைந்தது.வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க இடதுபுற கரையில் 300 மீட்டர் நீளத்திற்கு மேல் தடுப்புச்சுவர் கட்டியும், மீண்டும் உடைந்த தடுப்பணையை புதிதாக கட்டித்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.விழுப்புரம் நகரில் 95.14 எக்டேர் வி.மருதுார் ஏரி உள்ளது. இதனை துார்வாரி ஏரியின் கரைகளை வலுப்படுத்தி பொதுமக்கள் பயன் பெறும் வகையில், நடைபாதையாகவும் மற்றும் விவசாயிகளின் நீர்பாசன வசதி செய்து தந்து பயன்படுத்தும் வகையில் ஏரியை புதுப்பிக்க வேண்டும்.விழுப்புரம் மைய பகுதியில் இருக்கும் பழைய நகராட்சி அலுவலகத்தை மறுசீரமைப்பு செய்து, டவுன் ஹாலாக மாற்றி பொதுமக்கள் தங்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்த வசதியாக மாற்றித்தர வேண்டும்.விழுப்புரம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் நகராட்சி மூலம் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நகரத்தில் சில பகுதிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.விழுப்புரம் சிக்னல் அருகே செயல்படும் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.இவ்வாறு லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசினார்.