| ADDED : ஜூன் 05, 2024 10:57 PM
விழுப்புரம்: கூடுவாம்பூண்டி பகுதியில் தற்போதைக்கு புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.மேல்மலையனுார் அருகே கூடுவாம்பூண்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்பற்றாக்குறையை சரி செய்ய கூடுவாம்பூண்டியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, விழுப்புரம் மின் மேற்பார்வை பொறியாளர் லட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மேல்மலையனுார் தாலுகா, கூடுவாம்பூண்டியைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திருவண்ணாமலை மின்பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த சேத்துப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து 12 கி.மீ., நீளமுள்ள 11 கிலோ வோல்ட் கூடுவாம்பூண்டி மின்னுாட்டி மற்றும் 9 கி.மீ., நிளமுள்ள 11 கிலோவோல்ட் பெருவளூர் மின்னுாட்டி ஆகிய இரு மின்னுாட்டிகள் வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.கூடுவாம்பூண்டி மின்னுாட்டியின் மின்பாதை நீளம் அதிகமாக இருப்பதாலும், மின் பளுவும் கூடுதலாக உள்ளது. இதைக் குறைக்க கூடுவாம்பூண்டிக்கு அருகே உள்ள தேவனுார் துணை மின் நிலையத்தில் புதிதாக ஒரு 11 கிலோ வோல்ட் கீழ்செவலம்பாடி என்ற மின்னுாட்டி அமைத்து, மின்பளு மாற்றம் செய்ய உரிய மதிப்பீடு அனுமதி பெறப்பட்டுள்ளது.இந்த பணி முடிந்தவுடன், சேத்துப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து வரும் 11 கிலோ வோல்ட் கூடுவாம்பூண்டி மின்னுாட்டியின் நீளம் குறைவதோடு, மின்பளுவும் குறையும்.தற்போது கூடுவாம்பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.தொழில்நுட்ப சாத்திய கூறுகளின் அடிப்படையிலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டும், கூடுவாம்பூண்டி பகுதியில் தற்போதைக்கு புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டி அவசியம் எழவில்லை.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.