உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,வில் கூடுதல் செயலாளர் நியமனம் எப்போது? தொண்டர்கள் எதிர்பார்ப்பு

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,வில் கூடுதல் செயலாளர் நியமனம் எப்போது? தொண்டர்கள் எதிர்பார்ப்பு

அ.தி.மு.க.,வில் நிர்வாக வசதிக்காக, தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், இரண்டு எம்.எல்.ஏ.,தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் செய்வது என்று கட்சியின் பொது செயலாளர் பழனிச்சாமி முடிவு செய்தார். இதன் பேரில் கடந்த ஆண்டு ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், தெற்கு, தஞ்சாவூர் தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இரண்டு எம்.எல்.ஏ.,க்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டனர்.இதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பிரித்து கூடுதலாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர்.ஆனால் கூடுதல் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது. இதற்கிடையில் மாவட்டங்கள் பிரிக்கப்படாமல் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில், கூடுதல் மாவட்ட செயலாளர்களை பிரிப்பதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாஜி அமைச்சர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதையொட்டி எந்தெந்த தொகுதிகளை பிரித்து கூடுதல் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்யலாம் என்பது குறித்து கட்சியின் பொது செயலாளருக்கு சம்பந்தபட்ட மாவட்ட செயலாளர்கள் அனுப்பிவிட்டதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம்,விக்கிரவாண்டி, விழுப்புரம், செஞ்சி, வானுார், மயிலம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றது. இதற்கு மாஜி அமைச்சரான சண்முகம் ஒருவரே மாவட்ட செயலாளராக உள்ளார்.இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், சங்கராபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிக்கும் சேர்த்து மாவட்ட செயலாளராக குமரகுரு ஒருவரே உள்ளார்.தற்போது இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என பிரிக்கும் போது, விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக இரண்டு மாவட்ட செயலாளரும், கள்ளக்குறிச்சிக்கு கூடுதலாக ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் கட்சியை விட்டு பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு பொதுச்செயலாளர் பழனிச்சாமி கையொப்பம் உள்ள அ.தி.மு.க.,உறுப்பினர் அட்டை தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கட்சியில் கீழ்மட்டத்திலிருந்து(கிளை செயலாளர்) மேல்மட்டம் வரை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, அதன் பிறகு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகிஉள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.,வில் இரண்டு எம்.எல்.ஏ., தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என்று கட்சி தொண்டர்களின் விருப்பத்தை, கட்சி தலைமை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி