| ADDED : டிச 01, 2025 05:37 AM
விழுப்புரம்: மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை - சென்னை செல்லும் மாற்றுத்திறனாளிகளின் பைக் ஊர்வலத்திற்கு விழுப்புரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு பெண்களுக்கு புதிதாக அறிவித்த தோழி விடுதியை போல, மாற்றுத்திறனாளி ஆண், பெண்களுக்கு மாவட்டந்தோறும் விடுதி அமைத்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய் துறை மூலம் வழங்கும் 1,500 ரூபாய் உதவித் தொகையை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி, மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் முத்துமகேஸ்வரன், மணிகண்டன், கருத்தபாண்டி உட்பட 18 பேர், கடந்த 26ம் தேதி மதுரையில் இருந்து பைக்குகளில் ஊர்வலத்தை துவக்கினர். இந்த ஊர்வல குழுவினர் நேற்று காலை 10:00 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். இவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த மாவட்ட தலைவர் பழனி வரவேற்பு அளித்தார். தொடர்ந்து, இந்த ஊர்வலம் சென்னை நோக்கி புறப்பட்டனர். இவர்கள், வரும் 2ம் தேதி சென்னை சென்றடைகின்றனர்.