உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உரம் வாங்கும்போது குருணை மருந்துகள் வாங்குவது... கட்டாயம்: தேவையற்ற பொருள் கொடுப்பதாக விவசாயிகள் வேதனை

உரம் வாங்கும்போது குருணை மருந்துகள் வாங்குவது... கட்டாயம்: தேவையற்ற பொருள் கொடுப்பதாக விவசாயிகள் வேதனை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உரம் வாங்கும் விவசாயிகளுக்கு, வியாபாரிகள் தேவையற்ற உரங்களை தலையில் கட்டுவதால் பணம் விரயமாவதாக வேதனை அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் பிரதானமானது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 7,22,303 ஹெக்டரில் 3,37,305 சாகுபடி பரப்பாக கொண்டுள்ளது. இதில், 1,37,647 ஹெக்டர் பரப்பளவில் ஒரு முறைக்கு மேல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. சொர்ணாவாரி, சம்பா, நவரை ஆகியவை மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது. நெல்லுக்கு அடுத்தபடியாக உளுந்து, கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. பயிர்கள் நன்கு வளர உரங்கள் அவசியமாக உள்ளது. இந்த உரங்கள், கூட்டுறவு வேளாண் கடன் சங்கங்கள், உரம் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் வாங்கி நிலத்திற்கு பயன்படுத்துகின்றனர். கடந்த சில மாதங்களாக விழுப்புரம் மாவட்டம் முழுதும், உரம் விற்பனை செய்யும் நிலையங்களில், உரம் வாங்கும்போது கட்டாயம் குருணை மருந்து (உரத்தில் கலந்து தெளிப்பது) வாங்க வேண்டும் என கூறி, வழங்கி வருகின்றனர். இது குறித்து உரம் வியாபாரிகள் கூறுகையில்; உரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னையில் உள்ள உரம் விற்பனை நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக வாங்கும்போது, குருணை மருந்து கட்டாயம் வாங்கினால் உரம் தரப்படும் என தெரிவிக்கின்றனர். அதனால், வேறு வழியின்றி உரத்துடன் குருணை மருந்து கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வேண்டி நிலை உள்ளது என கூறினர். விவசாயிகள் கூறுகையில்; நெல், கரும்பு சாகுபடி செய்யும் நிலங்களில் பெரும்பாலும் உரம் மட்டும் போதுமானது. தேவையற்ற குருணை மருந்தை கலந்து தெளித்தால், சாகுபடி குறையும். வியாபாரிகள் கட்டாயப்படுத்துவதால், வேறு வழியின்றி வாங்கி செல்கிறோம். 50 கிலோ டி.ஏ.பி., உரம் ரூ.1,350, சூப்பர் பாஸ்பேட் ரூ. 610, அம்மோனியம் பாஸ்பேட் ரூ.1,220, பாக்டம்பாஸ் ரூ.1,225 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு உரம் மூட்டை வாங்கினால், அதன் பாதி விலைக்கு குருணை மருந்தை வாங்கி பணம் விரயமாகிறது என கூறினர். இது குறித்து, வேளாண்மை உரம் விற்பனை பிரிவு அதிகாரிகள் கூறுகையில்; விழுப்புரம் மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு இல்லை. இந்த உரம் விற்பனை செய்வதில் அரசு தெரிவித்துள்ள நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றி விற்பனை செய்கிறோம் என தெரிவித்தனர். குருணை மருந்து கட்டாயம் வாங்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் தர மறுத்துவிட்டனர். உரம் வாங்கும்போது, கட்டாயப்படுத்தி குருணை மருந்து வாங்க வேண்டும் என்ற நெறிமுறைகளை விலக்கி கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை