விழுப்புரம் சிறையில் காவலரை மிரட்டிய கைதி மீது வழக்கு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறையில், காவலரை மிரட்டிய கைதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், பொய்யாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன், 38; இவர், காஞ்சிபுரம் மாவட்ட போலீசாரால், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கு அவரை ஆஜர்படுத்துவதற்காக, கடந்த 21ம் தேதி விழுப்புரம், வேடம்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 21ம் தேதி கிளைச் சிறையில் பணியிலிருந்த காவலர் சிவராமன், சிறையின் வளாகத்திலிருந்த தியாகராஜனை, சிறை அறைக்குள் செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது, உள்ளே செல்ல முடியாது எனக் கூறி தகராறு செய்து, அவரை திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியுள்ளார். இது குறித்து, வேடம்பட்டு சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பாலாஜி அளித்த புகாரின் பேரில், தியாகராஜன் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.