ஆபத்தான ஏரிக்கரையை சீரமைக்க வலியுறுத்தி விவசாயிகள் தர்ணா: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம்: வானுார் அருகே ஆபத்தான நிலையில் உள்ள ஏரிக் கரையை சீர்படுத்த வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் அய்யனார், மாவட்ட தலைவர் சீனுவாசன் தலைமையில், விவசாயிகள் நேற்று மதியம் 1:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். போலீசார் அவர்களை தடுத்ததால், திடீரென அலுவலகம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, வானுார் அடுத்த புதுக்குப்பம் ஏரி கரையை சீரமைக்ககோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. டி.ஆர்.ஓ., அரிதாஸ் நேரில் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து விவசாயிகள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், 'வானுார் தாலுகா புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு, சுற்றுப் பகுதி 64 ஏரிகளின் உபரிநீர் வருகிறது. ஆனால், புதுக்குப்பம் ஏரி சிறியது என்பதால், அதன் கரை பலமின்றி உடையும் அபாயம் உள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு, ஏரியின் கரையை அகலப்படுத்தி உயர்த்தி தர வேண்டும்' என தெரிவித்திருந்தனர். நடவடிக்கை எடுப்பதாக டி.ஆர்.ஓ., உறுதியளித்தார். அதன்பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.