| ADDED : ஜன 14, 2024 05:50 AM
விழுப்புரம், : தமிழகத்தில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதையொட்டி, விழிப்புணர்வு அலங்கார வாகனம் துவக்க விழா நடந்தது.விழுப்புரம் பெருந்திட்ட வளாக உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். அமைச்சர் மஸ்தான், விழிப்புணர்வு அலங்கார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின், அவர் விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் பல போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கூறியதாவது:6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் வரும் 19 ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்த போட்டிகளில் களரி பயட்டு மற்றும் மல்லர் கம்பம் விளையாட்டுகள், திருச்சி நகரில் கூடைப்பந்து, நாக்டா விளையாட்டுகள், கோவை நகரில் கட்கா மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள், மதுரையில் சிலம்பம் ஆகிய போட்டிகள் நடக்கிறது. மற்ற போட்டிகள் அனைத்தும் சென்னையில் நடக்கிறது.இதையொட்டி, பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டம் தோறும் அலங்கார வாகனம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்த வாகனம் மாணவர்கள் பார்வையிடும் வகையில் துவக்கப்பட்டுள்ளது.மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, நகராட்சி கமிஷனர் ரமேஷ், தடகள பயிற்சியாளர் ராஜேஸ்வரி உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.