| ADDED : நவ 21, 2025 05:09 AM
விழுப்புரம்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் நாளை (22ம் தேதி) திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நடக்கிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நாளை 22ம் தேதி திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. அன்று காலை 9:00 மணி முதல் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற கிராமப்புற, நகர்ப் புறங்களைச் சேர்ந்த இளைஞர்களை தேர்வு செய்யலாம். இந்த முகாம் மற்றும் திருவிழா தொடர்பாக மேலும் விபரங்கள் பெற, ஊரக பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகு, ஊராட்சி அளவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, நகர்ப்புற பகுதிகளில் சம்மந்தபட்ட நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். இதில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் தங்களின் அனைத்து கல்விச் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 ஆகியவற்றோடு பங்கேற்கலாம். பங்கேற்கும் ஆண், பெண்கள் வயது வரம்பு 18 முதல் 40 வரையிலும், கல்வி தகுதி 8ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை பயின்றிருக்க வேண்டும். இது பற்றி மேலும் விபரம் பெற, அனைத்து வட்டார இயக்க மேலாண்மை அலகு மற்றும் விழுப்புரம் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.