மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்த மேல்மலையனுார் ஏரி
செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்தில் பனமலை மற்றும் மேல்மலையனுார் ஏரிகள் மிகப்பெரியவை. மேல்மலையனுார் ஏரி 1200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி பலத்த மழை பொழியும் போது மட்டுமே நிரம்பும். கடந்த 2021ம் ஆண்டு கனமழையின் போது இந்த ஏரி நிறைந்தது. மூன்றாண்டுகளுக்கு பிறகு நேற்று அதிகாலை மேல்மலையனுார் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறியது.மேல்மலையனுார் உபரி நீர் வெளியேறும் இடத்தில் இருந்தே சங்கராபரணி ஆறு துவங்குகிறது. மேல் மலையனுார் ஏரி நிரம்பும் ஆண்டில் சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்பாக இருக்கும். சங்கராபரணி ஆற்றிலும் பல மாதங்கள் தண்ணீர் தொடர்ந்து ஓடும். இந்த ஆண்டு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.