திண்டிவனம்: திண்டிவனம் அருகே பில்லி சூனியம் எடுப்பதாக கூறி, கட்டட ஒப்பந்தாரரிடம் நகை, பணம் பறித்த ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர், 36; கட்டட ஒப்பந்ததாரர். இவரிடம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், திண்டிவனம் பெலாக்குப்பம் ரோட்டில் வசிக்கும் கமால்பாஷா என்பவர் அறிமுகமாகியுள்ளார். குடும்பத்தில் நேரம் சரியல்லை, பில்லி சூனியம், மாந்திரீகங்கள் விலக பூஜை செய்ய வேண்டும் என கூறி, தனசேகர் உடுத்தும் துணிகள் மற்றும் நான்கு சவரன் நகை, பணம் ஆகியவற்றை, கமால்பாஷா வாங்கியுள்ளார். அதன் பிறகும் கஷ்டம் தீராததால் கொடுத்த நகையை கே ட்டபோது, அவர் தரவில்லை. இது குறித்து போலீசில் க டந்த ஓராண்டிற்கு முன்பு தனசேகர் புகார் அளித்தார். போலீசார் பேசி 2 சவரன் நகையை வாங்கி கொடுத்துள்ளனர். மீதி நகையை கேட்டபோது, என்னிடம் வைத்துக்கொண்டால் அடுத்த அமாவாசைக்குள் ரத்தம் கக்கி சாகும்படி செய்துவிடுவேன் என கமால்பாஷா மிரட்டியதாக கூறப்படுகி றது. இதுகுறித்து அவர் மீண்டும் புகார் கூறியும், திண்டிவனம் டவுன் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், தனசேகர், தமிழக முதல்வர் செல், கலெக்டர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,எஸ்.பி.,ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினார். இதன் பேரில், திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் பாதிக்கப்பட்ட தனசேகர் மற்றும் கமால்பாஷா ஆகியோரை நேற்று காலை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். இதில் தனசேகரிடம் வாங்கிய நகை, பணத்தை வரும் 15 நாட்களுக்குள் கொடுத்துவிடுவதாக கமால்பாஷா போலீசாரிடம் எழுதி கொடுத்துள்ளார். இதன் பேரில் கமால்பாஷாவை விடுவித்தனர். கமால்பாஷா மீது ரோஷணை போலீஸ் நிலையத்திலும் பல புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.